நித்திய சொர்க்கவாசல் கொண்ட கலியுக வெங்கடேச பெருமாள்-தல விருட்சமும் எந்த பெருமாள் கோவிலிலும் இல்லாத அபூர்வமே!
பொதுவாக அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகதசியன்று ஒரு நாள் மட்டுமே சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
ஆனால் தஞ்சாவூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கலியுக வெங்கடேச பெருமாள் கோவிலில் நித்திய சொர்கவாசல் அமைந்துள்ளது.
இங்கு பெருமாளை தரிசனம் செய்யும் பக்தர்கள் பின்னர் சொர்க்க வாசலை பயன்படுத்தி வெளியே வருவதை தினமும் செய்கிறார்கள். எனவே இத்தலம் நித்திய சொர்க்கவாசல் கொண்ட பெருமாள் கோவில் என்ற பெயரை பெற்றுள்ளது.
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் கனவில் தோன்றிய திருப்பதி வெங்கடேச பெருமாள் தஞ்சையில் தனக்கு வடக்கு நோக்கியபடி நித்திய சொர்க்கவாசல் போல நுழைவு வாசல் வைத்து ஒரு கோவில் கட்டுமாறு பணித்தார். மேலும் அவர் கூறுகையில் இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கலியுக வெங்கடேச பெருமாள் ஆகவும் மகாலட்சுமி சமேதராக வரதராஜ பெருமாள் ஆகவும் இருகோலத்தில் எழுந்தருளி காட்சி தருவேன். இத்தலத்தில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் திருவோணம் நட்சத்திரம் மற்றும் வைகுண்ட ஏகாதசி அன்றும் நித்திய சொர்க்கவாசல் வழியாக வந்து என்னை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி என்ற சொர்க்கவாசல் வழியாக சென்றால் கிடைக்கும் பலனையும் வைகுண்ட பதவியையும் தந்தருள்வேன் என்று கூறி மறைந்தாராம்.
அதன்படி தஞ்சையை கைப்பற்றிய மராட்டிய மன்னர்கள் மராட்டிய சிற்பக் கலைகளின் கருவூலமாக திகழும் வகையில் இக்கோவிலை கட்டினார்கள். இத்தலத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் புரட்டாசி சனிக்கிழமை தோறும் பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம். தமிழ்நாட்டில் வட திசை ராஜகோபுரம் கொண்ட ஒரே பெருமாள் கோவில் இதுவாகும். இதன் காரணமாக இக்கோவில் நித்திய சொர்க்கவாசல் கோவில் என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி என்று சொர்க்கவாசல் வழியாக செல்ல இயலாத பக்தர்கள் இத்தளத்தில் ஆண்டு முழுவதும் நித்திய சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமானை தரிசனம் செய்து அதே சொர்க்கவாசல் வழியாக வரலாம்.
இந்த கோவிலில் நவகிரகங்களுக்கு நடுவில் சூரியனுக்கு பதிலாக சந்திரன் இருக்கிறார். இதன் மேல் தளத்தில் கல்லினால் எந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர்.