சேரன் இயக்கத்தில் திரைப்படமாகும் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை..? வெளியான தகவல்!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது என்று பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில், லைகா நிறுவனம் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக்குவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. லைகா நிறுவனம் தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக பிரமாண்ட படங்களை தயாரித்து வருகிறது. பிப்ரவரி 9 அவர்கள் தயாரித்துள்ள ரஜினியின் லால் சலாம் திரைக்கு வருகிறது. ரஜினியின் புதிய படம் வேட்டையனையும் அவர்களே தயாரித்து வருகின்றனர். இவர்கள் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கைக் கதையை படமாக்க உள்ளனர். இதனை சேரன் இயக்குவார் என கூறப்படுகிறது.
சேரன் தற்போது ஜர்னி என்ற விவசாயத்தை மையப்படுத்திய இணையத்தொடர் ஒன்றை இயக்கியுள்ளார். இது சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அடுத்து கன்னட நடிகர் சுதீப் நடிப்பில் தமிழ், கன்னடத்தில் ஒரு படத்தை இயக்குகிறார். இதற்குப் பிறகு ராமதாஸின் வாழ்க்கைக் கதையை அவர் இயக்குவார் என கூறப்படுகிறது.
ராமதாஸின் வாழ்க்கைக் கதையை ஆவணப்படமாக எடுக்கும் முயற்சியும் இன்னொருபுறம் நடந்து வருகிறது. வெங்காயம் படத்தை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார் இதனை எடுத்து வருகிறார்.
விரைவில் இந்த ஆவணப்படம் மற்றும் லைகாவின் திரைப்படம் குறித்த மேலதிக தகவல்கள் வெளிவரலாம்.