காயத்தால் விலகிய முக்கிய வீரர்.. இந்தியாவை வீழ்த்த புது வீரரை இறக்கும் இங்கிலாந்து.. ஸ்டோக்ஸ் சூசகம்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது.
அத்தொடரில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்றது. அதனால் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் ஓலி போப் 196 ரன்கள் குவித்த உதவியுடன் 231 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதை சேசிங் செய்யவிடாமல் 7 விக்கெட்கள் சாய்த்த அறிமுக வீரர் டாம் ஹார்ட்லி இந்தியாவை 202 ரன்களுக்கு சுருட்டி இங்கிலாந்துக்கு மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அந்த வகையில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று தொடர் துவங்குவதற்கு முன்பாகவே எச்சரித்த இங்கிலாந்து தற்போது அதை செயலிலும் செய்து காட்டி அசத்தி வருகிறது.
காயத்தால் விலகல்:
இதை தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள இரண்டாவது போட்டியில் வெற்றி பெறுவதற்கான வேலைகளை இங்கிலாந்து செய்து வருகிறது. இருப்பினும் அந்த போட்டியிலிருந்து இங்கிலாந்து அணியின் முதன்மை சுழல் பந்து வீச்சாளர் ஜேக் லீச் காயத்தால் விலகுவதாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.
மேலும் முதல் போட்டியில் டாம் ஹார்ட்லி அறிமுகமாக களமிறங்கி இந்தியாவை தோற்கடித்தது போல ஜேக் லீச் விலகியதை பயன்படுத்தி இரண்டாவது போட்டியில் மற்றொரு இளம் ஸ்பின்னர் சோயப் பஷீரை அறிமுகப்படுத்தும் திட்டத்தை வைத்திருப்பதாகவும் பென் ஸ்டோக்ஸ் மறைமுகமாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2வது போட்டியில் ஜேக் லீச் விலகியுள்ளார். துரதிஷ்டவசமாக காலில் சந்தித்த காயத்தால் அவர் வெளியேறியுள்ளார்”
“இது நீண்ட நாட்கள் கழித்து விளையாட துவங்கிய அவருக்கும் எங்களுடைய அணிக்கும் பின்னடைவாகும். அதே சமயம் சோயப் பஷீர் இந்த தொடரில் விளையாடினால் நாங்கள் இழப்பதற்கு என்ன இருக்கிறது. அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் நான் அதைப் பற்றி யோசிப்பேன். என்னால் முடிந்தளவுக்கு சிறந்த அனுபவத்தை அவருக்கு வழங்க முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்”.