கழிவறைகூட இல்லாத வீட்டில் வசித்தவர் இன்றைக்கு ரூ.33,000 கோடி நிறுவனத்துக்கு அதிபதி
வாழ்க்கையில் எதுவும் அவ்வளவு எளிதாக எல்லாருக்கும் கிடைத்து விடாது. விடா முயற்சி, அயராத அர்ப்பணிப்பு, சிறந்த திட்டமிடல் போன்றவற்றின் மூலமே ஒருவர் வெற்றியின் இலக்கை அடைய முடியும். அதற்கு உதாரணமாக விளங்குகிறார் விபுல் சின்ஹா.
பல்வேறு முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிந்து விட்டு வெற்றிகரமாகத் தனது தொழிலில் முக்கிய இடத்தைப் பிடித்தார் விபுல் சின்ஹா. பிஹாரில் உள்ள பள்ளிகள் தரமற்றவை. அதில் நல்ல கல்வி கிடைக்காததால் விபுலும் அவரது சகோதரரும் சிறந்த கல்வியைப் பெற முடியவில்லை.
அவரது தந்தை மும்பையில் இருந்த ஒரு பார்மாசூட்டிகல் கம்பெனியில் சேல்ஸ் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். பின்னர் தனது சொந்த ஊரான பிஹாருக்கு திரும்பிய அவர் சொந்தமாக தொழில் செய்ய முனைந்தார். இரண்டு முறை அதில் தோல்வி அடைந்தார். பின்னர் அவர் தான்பாத்தில் வேலை செய்யத் தொடங்கினார்.
விபுல் சின்ஹாவின் குடும்பம் தான்பாத்துக்கு அருகே உள்ள கோவிந்த்பூரில் இருந்த ஒரு பேஸ்மெண்டில் குடியிருந்தது. அங்கு கழிவறை வசதி கூட இல்லை, குளிக்கத் தண்ணீரும் கிடையாது.
இந்த நிலையில் தனது 12 ஆம் வகுப்பை தான்பாத்தில் உள்ள பிகே ராய் மெமோரியல் கல்லூரியில் குறைந்த மதிப்பெண்களுடன் முடித்தார் விபுல் சின்ஹா.
இதைத் தொடர்ந்து விபுல் சின்ஹாவை வீட்டில் இருந்தபடி ஐஐடிஜேஇஇ பரிட்சைக்காகத் தயாராகும்படி அவரது தந்தை கூறினார். நான் நல்ல மதிப்பெண் பெறவில்லை என்பதால் எல்லாரும் என்னை ஏளனமாகப் பார்த்தனர் என்கிறார் விபுல்.
இருந்தபோதிலும் அவர் ஜேஇஇ தேர்வுக்காக படிக்கத் தொடங்கினார். ஆனால் அந்த தேர்வில் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை. இரண்டாவது முறையாக அந்த தேர்வை எழுதியபோது விபுல் சின்ஹா தேர்ச்சி பெற்றார். ஐஐடி கரக்பூரில் சேர்ந்து எலக்ட்ரிகல் இஞ்சினியரிங் பட்டப்படிப்பை முடித்தார்.
அதன் பின் குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஏதாவது வேலை செய்ய முடியுமா என முயற்சித்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு அமெரிக்காவின் அட்லாண்டாவில் ஆரக்கிள் நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் அங்கு சென்றுவிட்டார்.
அதன் பின்னர் சாப்ட்வேர் இஞ்சினியரிங் துறையில் இருந்து வென்ச்சர் கேபிட்டல் துறைக்கு அவர் மாறினார். பல நிறுவனங்களில் இது தொடர்பான வேலைகளை செய்தார். இதனால் மார்க்கெட் கேப் மற்றும் ஒரு தயாரிப்புக்கான டிமாண்டை உருவாக்கும் திறனைப் பெற்றார். 2014 ஆம் ஆண்டில் அவர் ரூப்ரிக் என்ற நிறுவனத்தை தனது நண்பர்கள் அரவிந்த் நித்ரகாஷ்யப், அரவிந்த் ஜெயின், சோஹம் மஜூம்தார் ஆகியோருடன் சேர்ந்து தொடங்கினார்.
சில வருடங்களிலேயே அவருக்கு கோல்மேன் சாக்ஸ், சிட்டிபாங்க் ஆகியோர் வாடிக்கையாளர்கள் ஆனார்கள். சைபர் தாக்குதல்களில் இருந்து நிறுவனங்களை பாதுகாக்கும் வேலைகளை ரூப்ரிக் நிறுவனம் செய்து வருகிறது. தற்போது அந்த கம்பெனியின் சந்தை மதிப்பு ரூ.33,000 கோடி ஆகும்.