போயிங் 737 விமானத்தை சொகுசு பங்களாவாக மாற்றிய நபர்! அசந்து போன ஆனந்த் மஹிந்திரா!
ட்விட்டரில் மிகவும் பிசியாக இருக்கும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, தன்னைப் பின்தொடர்பவர்களுக்காக டிரெண்டிங் பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார். சனிக்கிழமையன்று, ஒரு விமானத்தை வில்லாவாக மாற்றிய நபரின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஃபெலிக்ஸ் டெமின் கைவிடப்பட்ட போயிங் 737 விமானத்தை சொகுசு தனியார் வில்லாவாக மாற்றியுள்ளார். தனித்துவமான இந்த சொகுசு பங்களா இந்தோனேசியாவின் பாலியில் உள்ள நியாங் நியாங் பாறைகளின் மேல் அமைந்துள்ளது.
அதில் இரண்டு படுக்கையறைகள், இந்தியப் பெருங்கடலைப் பார்க்கும் வகையில் அமைந்துள்ள நீச்சல் குளம், ஒரு பார், லவுஞ்சர்கள் என சொகுசான பல வசதிகள் உள்ளன.
இதைப்பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள மஹிந்திரா குழுமத் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, “சிலர் தங்கள் கற்பனைகளை நிஜமாக மாற்றும் அதிர்ஷ்டம் பெற்றவர்கள். இவர் தனது கற்பனைக்கு எந்தக் கட்டுப்பாட்டையும் விதித்துக்கொள்ளவில்லை!” என்று வியந்து கூறியிருக்கிறார்.
கைவிடப்பட்ட போயிங் 737 விமானத்தை 2021ஆம் ஆண்டு ஃபெலிக்ஸ் டெமின் வாங்கியுள்ளார். அதை பாலிக்குக் கொண்டு சென்று வில்லாவாக மாற்றியுள்ளார். 2023இல் இந்த வில்லாவை பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். விரைவிலேயே இந்த வில்லா உலகின் மிகவும் மதிப்புமிக்க ஆடம்பர வில்லாக்களில் ஒன்றாகப் பிரபலமானது.
ஆனந்த் மஹிந்திரா தனது பதிவில் விமானத்திலிருந்து உருவான வில்லாவின் வீடியோவையும் இணைந்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த பயனர்கள் பலர் அதில் தங்குவதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டு ரிப்ளை செய்து வருகிறார்கள். இந்த வில்லா வாடகைக்கு விடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.