குளிர் காய்வதற்காக பைக்கை எரித்த கொத்தனார்.. இப்படி செய்றவங்க மேல காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கும் தெரியுமா?
இந்தியாவில் குளிர் காய்வதற்காக ஓர் நபர் இருசக்கர வாகனத்தை கொளுத்திய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த விநோத நிகழ்வு எங்கு அரங்கேறியது? சம்பவத்தை செய்த நபர் யார்? அவர் தற்போது எங்கே இருக்கின்றார்? இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
அதிகமாக குளிர் எடுத்துச்சுனா கம்பளிய போத்திட்டு படுத்து தூங்குபவர்களே இங்கு அதிகம். இல்லை என்றால் அருகில் விறகுகளைப் போட்டு கொளுத்தி அதில் குளிர் காயவும் செய்வார்கள். ஆனால், இங்க ஒரு மனுசன் பைக்கை கொளுத்திவிட்டு அதில் குளிர் காய்ந்திருக்கின்றார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது.
தலைநகர் டெல்லியிலேயே இந்த விநோத நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. கடும் பனி பொழிவிற்கும், குளிருக்கும் பெயர்போன இந்திய நகரங்களில் ஒன்றாக டெல்லி இருக்கின்றது. இங்குள்ள மக்கள் குளிரைச் சமாளிக்க கம்பளி ஆடைகளையும், கேம்ப் ஃபையரையும் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் புல் பிரஹ்லத்புர் பகுதியில் வசிக்கும் ஓர் நபர் இருசக்கர வாகனத்தை கொளுத்திவிட்டு அதில் குளிர் காய்ந்திருக்கின்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்த நபரை தற்போது கைது செய்திருக்கின்றனர். அந்த நபரின் பெயரின் கிஷான் குமார் என்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது. ஜிசி பிளாக் எனும் பகுதியில் வைத்தே வாகனத்தை அவர் தீயிட்டு கொளுத்தி இருக்கின்றார்.
இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அவர் கொளுத்தியது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் ஆகும். இந்தியர்கள் பலரின் பிரியமான இருசக்கர வாகன மாடலாக இது காட்சியளிக்கின்றது. இதை குளிருக்காக கொளுத்தி இருப்பது ஸ்பிளெண்டர் பைக் காதலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
விடியற்காலை 3 மணி அளவிலேயே இந்த செயலை அவர் செய்திருக்கின்றார். மேலும், தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததன் விளைவாக பைக் தற்போது முழுமையாக எரிந்து நாசமாகி இருக்கின்றது. வெறும் கூடு மட்டுமே மிஞ்சியிருக்கின்றது. இந்த சம்பவம் டெல்லி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்தவர் மீது தற்போது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. முக்கியமாக 435 பிரிவின்கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கின்றது. வேண்டும் என்றே தீ விபத்தை ஏற்படுத்துவோர் மீது தொடுக்கப்படும் வழக்கின் பிரிவே இதுவாகும்.
கிஷான் குமார் தீ விபத்தை ஏற்படுத்தியபோது போதையில் இருந்திருக்கக் கூடும் என போலீஸாரால் சந்தேகிக்கப்படுகின்றது. மேலும், வேறு ஏதேனும் உள்நோக்கத்துடன் அவர் தீ விபத்தை ஏற்படுத்தினாரா என்பது பற்றியும் போலீஸார் கிஷான் குமாரிடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் கொத்தனராக பணியாற்றி வருகின்றார்.
மேலும், பைக்கை தீயிட்டு கொளுத்தும் முன்னர் வரை அவர் நீண்ட நேராக ஓர் ஆட்டோரிக்ஷாவில் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே திடீரென எழுந்து வந்து பைக்கை தீப் பெட்டியால் கொளுத்தி எரித்திருக்கின்றார். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்தியர்கள் ஃபேவரிட்டான ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் இருக்கின்றது. 73,500 ரூபாய் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மைலேஜ் தருவதில் மிக சிறந்த இருசக்கர வாகனம் இதுவாகும். இத்துடன், பைக்கை பராமரிப்பதும் மிக சுலபம் ஆகும். பெரிய அளவில் செலவு ஏற்படாது. இதனால்தான் பட்ஜெட் இருசக்கர வாகன பிரியர்களின் மனம் கவர்ந்த வாகனமாக ஸ்பிளெண்டர் காட்சியளிக்கின்றது.