கசிந்த அதிமுக்கிய இராணுவ இரகசியம்..! பெரும் ஆபத்தில் பிரித்தானியா
உக்ரைனில் உள்ள பிரித்தானிய இராணுவம் தொடர்பாக கசிந்துள்ள தகவலானது, பிரித்தானிய இராணுவத்திற்கு ஏற்பட போகும் பெரும் ஆபத்தின் ஒரு சிறு தொடக்கமாக இருக்கலாம் என சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள பிரித்தானிய இராணுவப் படை மற்றும் ஜேர்மன் விமானப்படை இடையிலான காணொளி மூலமான கலந்துரையாடல் ஒன்று கடந்த திங்கட்கிழமை (05.03.2024) தவறுதலாக கசிந்திருந்தது.
குறித்த கலந்துரையாடலில், கிரிமியன் பாலம் மீதான ஏவுகணை தாக்குதல், ஏவுகணை விநியோகம் மற்றும் உக்ரைனில் உள்ள பிரித்தானிய தரைப்படை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
பலவீனமான ஜேர்மனி
மேலும், உக்ரைனின் இராணுவப் படைக்கு ஜேர்மனி நாட்டின் இராணுவப் படையின் உதவி மேலும் தேவைப்படுமா என்பது குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த தகவல் கசிவானது பிரித்தானிய இராணுவப் படைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என சர்வதேச இராணுவ ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
அத்துடன், நேட்டோ அமைப்பின் பலவீனமான இணைப்பாக ஜேர்மனி உள்ளதாகவும் அந்நாட்டின் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஒரு பயனுள்ள முட்டாள் எனவும் ரஷ்யா கருதுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கமரூன் ஜேர்மனி விஜயம்
இந்நிலையில், பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
மேலும், இந்த கலந்துரையாடலில், உக்ரைன் மற்றும் காசாவில் இடம்பெறும் யுத்தங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.
எவ்வாறெனினும், இந்த இராணுவத் தகவல் கசிவானது உக்ரைன் நாட்டிற்கு பிரித்தானியாவின் ஆதரவை ஒருபோது தடுக்காது என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.