பட்டப்பெயர் சூட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் – போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு..!
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 27. இவர், 2022 ஜூலை 14ல் வழிப்பறியில் ஈடுபட முயன்றதுடன், தடுக்க வந்த பொதுமக்களை கற்களை கொண்டு தாக்கியதாகக் கூறி, அரும்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் விசாரித்தார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவில் ‘பெயர்’ என்பது, நம் அடையாளத்தின் முக்கிய பகுதி. தனிப்பட்ட, கலாசார, குடும்ப, வரலாற்று தொடர்புகளை ஆழமாக எடுத்து செல்பவை பெயர்கள். நாம் யார், சார்ந்திருக்கும் சமூகம் என்ன, உலகில் நம் இடம் என்ன என்பன போன்றவற்றை, நமக்கு உணர்த்துகின்றன. பெயரை மாற்றுவது என்பது, தனிப்பட்ட ஒருவரின் சொந்த விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர, வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு போலீசார், கண்ணியக் குறைவான பெயர்களை சூட்டக்கூடாது.
இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபரை, ‘குரங்கு’ சரவணன் என, எப்.ஐ.ஆர்., என்ற, முதல் தகவல் அறிக்கையில் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு, பட்டப்பெயர் வைப்பது, சூட்டுவது என்பது, அவர்களின் மனித உரிமையையும், அவர் நிரபராதி என கருதப்படுவதற்கான உரிமையையும் மீறுவதாக அமையும். எனவே, இதுபோல அடைமொழிகளை வைத்து, குற்றம் சாட்டப்பட்ட நபர்களை அழைக்கும் நடைமுறையை உடனே நிறுத்த வேண்டும்; அதற்கான உரிய அறிவுறுத்தல்களை காவல்துறை உயர் அதிகாரிகள் வழங்க வேண்டும்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரால், பொது அமைதிக்கு இடையூறு ஏற்பட்டதாக, போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் நடந்த இச்சம்பவத்துக்கு, தனிப்பட்ட சாட்சி ஒருவர் கூட இல்லை. வீசப்பட்ட அந்த கற்களால், ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், 1 செ.மீ., அளவு கூட இல்லாத இரண்டு கற்களை பயன்படுத்தி கூட்டத்தை அச்சுறுத்தினார் என்ற கதையை, எல்.கே.ஜி., – யு.கே.ஜி., குழந்தைகள் கூட நம்ப மாட்டார்கள்.
ஏன், அந்த கற்களை கொண்டு ஒரு காக்கையை கூட, அச்சுறுத்தி விரட்ட முடியாது. எனவே, இந்த வழக்கில் அரசு சாட்சிகள் நம்பகத்தன்மை அற்றதாக உள்ளதால், குற்றம் சாட்டப்பட்ட சரவணன் விடுதலை செய்யப்படுகிறார். வழக்கு ஆவணங்களில் இருந்த, ‘குரங்கு சரவணன்’ என்ற வார்த்தையும் நீக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.