“அடுத்து வெடிக்கும் போர்?” வட மற்றும் தென் கொரியாவுக்கு இடையே அப்படி என்ன தான் பிரச்சனை! வரலாறு என்ன
தென்கொரியா மீது வடகொரியா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அங்கே போர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இரு நாடுகளும் இப்படித் தொடர்ந்து அடித்துக் கொள்வது ஏன்.. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருவது அனைவருக்கும் தெரியும்.. தென் கொரியாவுக்குச் சொந்தமான Baengnyeong, Yeonpyeong தீவுகளில் வடகொரியா தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால் அங்கே போர் சூழும் ஒரு அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2010ல் இந்த தீவுகளின் மீது வடகொரியா சரமாரியாகக் குண்டுகள் வீசியதில் இருந்து இரு கொரியாக்களுக்கும் இடையே அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
போர் உருவாகும்: கடந்த 13 ஆண்டுகளாக அங்கே தீவிர பாதுகாப்பு போடப்பட்ட நிலையில், சற்று அமைதி திரும்பியது.. இந்தச் சூழலில் வடகொரியா மீண்டும் பீரங்கி தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த சனிக்கிழமை தான் தென் கொரியா மற்றும் அதன் அமெரிக்க நட்பு நாடுகளுக்கு எதிராகப் போருக்குத் தயாராக இருப்பதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் கூறியிருந்தார்.
இந்தச் சூழலில் தான் இப்போது தாக்குதல் நடந்துள்ளது.. இதன் மூலம் தென்கொரியாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையே பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பிரச்சனை போராக மாற வாய்ப்புள்ளது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். இரு நாடுகளும் இந்த இடத்திற்கு வந்தது எப்படி.. இரு நாடுகளுக்கும் கடந்த காலங்களில் இடையே இருந்த பிரச்சினை என்ன என்பதைப் பார்க்கலாம்.
மோதல்: கொரியத் தீபகற்பம் எப்போதும் இப்படி இரண்டா பிளவுபட்டே இருந்தது இல்லை. இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை அது ஒன்றாகவே இருந்தது. குறிப்பாக 1910 முதல் 1945 வரை கொரியா ஜப்பானின் காலனியாக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் வீழ்த்தப்பட்ட நிலையில், நேச நாட்டுத் தலைவர்கள் கொரியாவை ஜப்பான் அதிகாரத்திலிருந்து விடுவிக்கப்படும் என்று ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர்.
அதேநேரம் கொரியாவின் மக்கள் தங்களை சுயமாக ஆட்சி செய்து கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்று தீர்மானிக்கப்படும் வரை சர்வதேச நாடுகளின் கீழ் கண்காணிப்பில் இருந்தனர்.
கடந்த காலங்களில் நடந்தது என்ன: இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் சோவிய ஒன்றியம் கொரியாவை ஆக்கிரமித்தது. 38ஆவது பேரலல் என்ற இடத்தை கொரியாவை இரண்டு பாதியாகப் பிரிக்க முடிவு செய்தன. அப்போது வடகொரியா சர்வாதிகாரம் பக்கம் சென்றது. அதேபோல தென்கொரியாவில் மக்கள் ஆட்சி மலர்ந்தது. தொடர்ந்து வடகொரியாவில் கிம் குடும்பத்தினர் தான் அங்கே அங்கே மூன்று தலைமுறைகளில் அதிபர்களாக இருந்து
கிம் இல்-சங் 1948ஆம் ஆண்டு வடகொரியாவை நிறுவினார். அதே ஆண்டில், அமெரிக்கா தென் கொரியாவைக் குடியரசாக அறிவித்தது. 1950ஆம் ஆண்டு வட கொரியா, அதன் கம்யூனிஸ்ட் செயல்திட்டத்தின் கீழ், இரு நாடுகளையும் ஒரு சுதந்திர நாடாக இணைக்கும் முயற்சியில் தென் கொரியாவை இணைக்க முயன்றபோது இரு நாடுகளுக்கும் இடையே பகை ஏற்பட்டது.
என்ன நடந்தது: போருக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கொரியப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறையாகக் கையெழுத்தானது. இரு நாடுகளும் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு எல்லையாகச் செயல்பட, 249 கிலோமீட்டர் நீளமுள்ள பகுதியான கொரிய ராணுவ மயமாக்கப்பட்ட மண்டலம் (Korean Demilitarized Zone) கட்டப்பட்டது.
கொரியப் போர் முடிவடைந்து சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகும், அங்கே இதே நிலை தான் தொடர்கிறது. இன்று கொரியப் போருக்குப் பிறகு முதல் முறையாக, இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகளை ஒன்றுடன் ஒன்று தாக்கியுள்ளன.