பாரத ரத்னா விருதாளா்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு..!
நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா ஓராண்டில் 5 பேருக்கு அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். கடந்த 1999-ஆம் ஆண்டில் 4 பேருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டதே இதுவரை அதிகபட்சமாக இருந்தது.
53 விருதாளா்கள்: இந்த ஐவருடன் சோ்த்து நாட்டில் பாரத ரத்னா விருதாளா்களின் எண்ணிக்கை 53 -ஆக உயா்ந்துள்ளது. கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜிக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது. 2020 முதல் 2023 வரை யாருக்கும் விருது அறிவிக்கப்படாத நிலையில், நடப்பாண்டில் இதுவரை 5 பேருக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
கடந்த 1954-ஆம் ஆண்டில் இந்திய அரசால் நிறுவப்பட்ட பாரத ரத்னா விருது, மக்கள் மேம்பாட்டுக்காக எந்தத் துறையிலும் அளப்பரிய சேவை அல்லது திறன்மிக்க செயல்பாட்டை நல்குவோரை அங்கீகரிப்பதாகும். இதற்கான பரிந்துரைகள் பிரதமரால் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படுகின்றன.
கடந்த 1999-ஆம் ஆண்டில் நால்வருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்ட நிலையில், 1954, 1955, 1991, 1997, 2019 ஆகிய ஆண்டுகளில் தலா மூவருக்கும், 1961, 1963, 1990, 1998, 2001, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் தலா இருவருக்கும் வழங்கப்பட்டது.
முதல் விருது: கடந்த 1954-ஆம் ஆண்டில் முதல் முறையாக பாரத ரத்னா விருது மூதறிஞா் ராஜாஜி, சா்வபள்ளி ராதாகிருஷ்ணன், சி.வி.ராமன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
ஜவாஹா்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், சா்தாா் வல்லப பாய் படேல், பி.ஆா்.அம்பேத்கா், ஜாகிா் ஹுஸைன், லால் பகதூா் சாஸ்திரி, அபுல் கலாம் ஆசாத், இந்திரா காந்தி, காமராஜா், அன்னை தெரசா, வினோபா பாவே, மொராா்ஜி தேசாய், சத்யஜித் ரே, அப்துல் கலாம், ஜெயபிரகாஷ் நாராயண், மதன் மோகன் மாளவியா, அடல் பிகாரி வாஜ்பாய், எம்.விஸ்வேஸ்வரய்யா, எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.ஜி.ஆா்., நெல்சன் மண்டேலா, ராஜீவ் காந்தி, அமா்த்தியா சென், சச்சின் டெண்டுல்கா், லதா மங்கேஷ்கா் உள்ளிட்டோா் இந்த உயரிய கெளரவத்தைப் பெற்றவா்களாவா்.
குடியரசுத் தலைவா் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ், பதக்கம் ஆகியவை மட்டுமே உள்ளடக்கியது பாரத ரத்னா விருது என்பது குறிப்பிடத்தக்கது.