பெரும் தொகைக்கு விலைபோன ஜோதிகாவின் சைத்தான் படத்தின் ஓடிடி உரிமை
சூர்யா, ஜோதிகா இருவரும் குழந்தைகளுடன் மும்பையில் குடியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தமிழுடன் இந்தியிலும் இருவரும் கவனம் செலுத்தி வருகின்றனர். ஜோதிகா நடித்திருக்கும் இந்திப் படம் சைத்தான் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், பிரபல ஓடிடி நிறுவனம், திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகான படத்தின் ஓடிடி உரிமையை பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது.
திருமணத்துக்குப் பின் எட்டு வருடங்கள் நடிக்காமலிருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் மறுபடியும் நடிக்க வந்தார். மலையாள நடிகர் திலீபை திருமணம் செய்த பின் நடிப்பிலிருந்து விலகியிருந்த மஞ்சு வாரியர், விவாகரத்து பெற்றுக் கொண்டபின் ஹவ் ஓல்ட் ஆர் யூ? திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரியானார். அந்தப் படத்தின் தமிழ் ரீமேக் 36 வயதினிலே ஜோதிகானவின் ரீ என்ட்ரி திரைப்படம் என்பது ஆச்சரியமான ஒற்றுமை.
தொடர்ந்து ராட்சசி, மகளிர் மட்டும் என்று தமிழில் நடித்துக் கொண்டிருந்தவர், காதல் – தி கோர் படத்தின் மூலம் மலையாளத்திலும் ரீ என்ட்ரியானார். இந்தியில் நீண்ட வருடங்களுக்குப் பின் சைத்தான் என்ற படத்தில் நடித்துள்ளார். 2011 ல் பிஜோய் நம்பியார் இந்தியில் சைத்தான் என்ற படத்தை இயக்கினார். அப்படத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இது முற்றிலும் வேறு கதை. அஜய் தேவ் கானின் மனைவியாக இதில் ஜோதிகா நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களது வீட்டில் அடைக்கலம் புகும் மாதவன், அஜய் தேவ்கானின் மகளை ஹிப்னாடிசம் செய்து, அமானுஷியமான விஷயங்களை அரங்கேற்றுவம், அந்த குடும்பம் எப்படி அவரிடமிருந்து தப்பித்தது என்பதும் கதை என்கிறார்கள். மார்ச் 8 சைத்தான் திரைக்கு வருகிறது.
சைத்தானின் ட்ரெய்லர் வெளியான நிலையில், திரையரங்கு வெளியீட்டிற்கு பின்பான அதன் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. பெரும் தொகைக்கு இந்த உரிமை விற்கப்பட்டுள்ளது என தெரிவித்திருக்கும் படக்குழு, எத்தனை கோடிகள் என்பதை வெளியிடவில்லை.
சைத்தானைத் தொடர்ந்து மேலும் அதிக இந்திப் படங்களில் நடிக்க ஜோதிகா திட்டமிட்டுள்ளார். சூர்யாவும் கர்ணா என்ற இந்தி புராணப் படத்தில் கர்ணனாக நடிக்கிறார். ஜான்வி கபூர் இதில் திரௌபதியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.