பாய்ந்து வந்த நபர்.. எதிர்க்கட்சி தலைவரின் கழுத்தில் விழுந்த கத்திக்குத்து.. ஆடிப்போன தென்கொரியா
பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தபோது தென்கொரிய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான லீ ஜே மியுங்கின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்கொரியா அதிபராக யூன் சுக் இயோல் உள்ளார். கடந்த 2022ம் ஆண்டு அந்நாட்டில் அதிபர் தேர்தலில் இவர் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் லீ ஜே மியுங்கை வீழ்த்தி இருந்தார். தற்போது லீ ஜே மியுங் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார்.
மீண்டும் 2027ம் ஆண்டு தென்கொரியாவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட லீ ஜே மியுங் தயாராகி வருகிறார். மேலும் இவர் போட்டியிட தயாராக உள்ளார். இவர் நிச்சயம் தற்போதைய அதிர் யூன்சுக் யோலிக்கு கடும் போட்டியை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் 59 வயது நிரம்பிய எதிர்க்கட்சி தலைவரான லீ ஜே மியுங் பூசான் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டட பணியை ஆய்வு செய்தார். அப்போது அவரை பத்திரிகையாளர்கள், ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டனர். பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். சில ஆதரவாளர்கள் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு கொண்டிருந்தனர்.
இந்த வேளையில் திடீரென்று மர்மநபர் அவரது கழுத்தில் கத்தியால் குத்தினார். காரில் ஏற முயன்றபோது அவர் மீது கத்தியால் குத்தப்பட்டது. இதனால் லீ ஜே மியாங் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினர். இதையடுத்து உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகே உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவி சிகிச்சை அளித்தனர்.
அதன்பிறகு அவருக்கு மேல்சிகிச்சைக்காக விமானத்தில் சியோலுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கிடையே அவரை கத்தியால் குத்திய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். விசாரணையில் அந்த நபருக்கு 60 வயது ஆவது தெரியவந்தது.
அந்த நபர் 18 சென்டிமீட்டர் நீளம் கொண்ட கத்தியை ஆன்லைனில் வாங்கி அவரை குத்தியது தெரியவந்தது. இவர் லீ ஜே மியுங்கிற்கு ஆதரவு வாசங்களுடன் அங்கு வந்ததும், அவர் திடீரென்று கத்தியால் குத்தியதும் தெரியவந்தது. இருப்பினும் கத்தியை வைத்து குத்தியதன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்கொரியாவில் அடுத்து நடக்கும் அதிபர் தேர்தலை குறிவைத்து இவர் தற்போதைய அதிபர் மீது பல ஊழல் புகார்களை முன்வைத்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மேலும் சமீபத்தில் உண்ணாவிரதம் இருந்தார். இத்தகைய சூழலில் எதிர்க்கட்சி தலைவர் லீ ஜே மியாங்கை பொதுவெளியில் ஒரு நபர் கத்தியால் குத்திய சம்பவம் தென்கொரியாவில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.
இதற்கிடையே தான் தென்கொரியா அதிபர் யூன்சுக் யோலின் செய்தி தொடர்பாளர் கிம் சூ கியுங்க கூறுகையில், ”இதுபோன்ற தாக்குதல் நடந்து இருக்க கூடாது. இத்தகைய வன்முறையை ஒருபோதும் பொறுத்து கொள்ள முடியாது. தவறு செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.