கடன் வாங்கி தொழில் தொடங்கியவர் இன்று இந்தியாவின் டாப் நகைக்கடை அதிபர்… யார் தெரியுமா?
ஒரு காலத்தில் கடன் வாங்கி தொழிலை தொடங்கியவர் இன்று இந்தியாவே வியக்கும் நகைக்கடை அதிபராக உச்சம் தொட்டுள்ளார். பல இளைஞர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் அவரது தொழில் வெற்றி குறித்து பார்க்கலாம்.
1947 ஏப்ரல் 23ஆம் தேதி கேரளாவில் பிறந்த கல்யாணராமன், தனது சிறு வயதில் இருந்தே தந்தைக்கு துணிக்கடையில் உதவி செய்து வந்தார். அந்த துணிக்கடையில் வேலை பார்க்கும் போது வியாபாரத்தின் அடிப்படையான நுணுக்கங்களை அவர் தந்தையிடம் கற்றுக் கொண்டார். ஸ்ரீ கேரளா வர்மா கல்லூரியில் அவர் வணிகவியல் பட்டப்படிப்பை படித்தாலும் அவருக்கு ஆரம்பத்தில் வணிகத்தின் மீது பெரிய ஈடுபாடு இல்லாமல் இருந்தது. சுமார் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி ரூ. 25 லட்சம் சேமித்து அவர், நகைக்கடை திறப்பதற்கு ஆசைப்பட்டார்.
இருப்பினும் அந்த பணத்தை வைத்துக்கொண்டு நகைக்கடை திறக்க முடியாது என்பதால், கூடுதலாக வங்கியில் இருந்து ரூ. 50 லட்சம் வாங்குவதற்கு அவர் முடிவு செய்தார். இதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு கடனை பெற்ற கல்யாணராமன் தனது முதல் கடையை கேரள மாநிலம் திருச்சூரில் திறந்து அதற்கு கல்யாண் ஜூவல்லர்ஸ் என்ற பெயரையும் வைத்தார்.
இவ்வாறு மிக எளிமையான முறையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் திருச்சூரில் உதயமானது. இன்றைக்கு இந்தியா முழுவதும் 200க்கும் அதிகமான கடைகளை கல்யாண் ஜுவல்லர்ஸ் கொண்டுள்ளது. வெளிநாடுகளில் குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத் மற்றும் ஓமன் போன்ற நாடுகளில் 30 ஷோரூம்கள் கல்யாண் ஜுவல்லர்ஸிற்கு உள்ளன.
கேரளாவில் ஒரு சிறிய நகரத்தில் மிக எளிமையாக வர்த்தகத்தை தொடங்கிய கல்யாணராமன், இன்று 17,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட கல்யாண் ஜூவல்லர்ஸின் அதிபராக உயர்ந்து நிற்கிறார்.
தனது தொழில் பயணத்தில் வெற்றி பெற முயற்சிக்கும் ஏராளமான இளைஞர்களுக்கு கல்யாண ராமனின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. தளராத உறுதியுடன், சரியான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் சாதாரண நபர்களும் உச்சம் தொடலாம் என்பதற்கு கல்யாண ராமனின் வெற்றி உதாரணமாக அமைந்துள்ளது.