லொட்டரியில் ரூ.75 லட்சம் பரிசு விழுந்தவுடனேயே பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த நபர்.., என்ன காரணம்?
லொட்டரி சீட்டில் ரூ.75 லட்சம் பரிசு விழுந்த நிலையில் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லொட்டரியில் ரூ.75 லட்சம் பரிசு
இந்திய மாநிலமான கேரளாவுக்கு, மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அசோக் என்ற தொழிலாளி சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி வந்துள்ளார். இவர், அங்குள்ள பெருந்தல்மன்னா அருகே புலமந்தோல் பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
அவர், மேற்குவங்க மாநில தொழிலாளர்களுடன் தங்கியிருந்து வேலைகளை செய்துள்ளார். இந்நிலையில், கேரள மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் வின் லொட்டரியை வாங்கியுள்ளார்.
இதற்கான குழுக்கல் கடந்த திங்கட்கிழமை நடந்த நிலையில், அசோக் வாங்கிய லொட்டரிக்கு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை விழுந்துள்ளது.
பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்
இதனால் அசோக் பெரும் மகிழ்ச்சி அடைவதற்கு பதிலாக அச்சம் அடைந்துள்ளார். அதாவது அவர், தனது பரிசு விழுந்திருந்த லொட்டரி சீட்டை யாராவது பறித்துக் கொள்வார்கள் என்ற அச்சத்தில் இரண்டு மலையாள நண்பர்களுடன் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.
அங்கு, தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து பாதுகாப்புக்காக காவலர் ஒருவரை அசோக்குடன் வங்கிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் வங்கியில் லொட்டரி டிக்கெட்டை முதலீடு செய்யும் வரை பாதுகாப்பு அளித்துள்ளனர். இதன் பின்னர், அசோக் தனது சொந்த ஊரான மேற்கு வங்கத்திற்கு கிளம்பி சென்றுள்ளார்.