வரும் ஏப்ரல் முதல் தமிழகம் முழுவதும் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் அமல்..!
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,820 மதுக் கடைகள் வாயிலாக, மதுபானங்களை விற்பனை செய்கிறது. குடிமகன்கள் மது அருந்தி விட்டு, காலி பாட்டில்களை சாலைகளில் வீசிச் செல்கின்றனர். இதனால், மனிதர்கள், கால்நடைகள் பாதிக்கப்படுகின்றனர்.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி டாஸ்மாக், காலி மதுபாட்டில்களை மதுக் கடைகளிலேயே திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் தற்போது, நீலகிரி, பெரம்பலுார், கோவை, திருவாரூர், நாகை, தர்மபுரி, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளது..
அம்மாவட்டங்களில் மது பாட்டில் விற்கப்படும் போது, அதிகபட்ச சில்லரை விலையுடன் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. குடிமகன்கள், காலி பாட்டிலை கடையில் வழங்கியதும், 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும்
இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மதுக் கடைகளிலும், வரும் ஏப்ரல் முதல் செயல்படுத்தும் பணியில் டாஸ்மாக் ஈடுபட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
அனைத்து மதுக் கடைகளிலும் ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக, மது பாட்டில் திரும்ப பெறும் பணி மேற்கொள்ளப்படும். அந்நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது தடுக்கப்படும் என்றார்.