உலகிலேயே அதிவேக செஞ்சுரி அடித்த வீரர்.. தட்டித் தூக்கிய டெல்லி கேபிடல்ஸ்..பாண்டிங் போட்ட திட்டம்
2024 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக நீக்கப்பட்ட டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து லுங்கி என்கிடி நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கை டெல்லி கேபிடல்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
21 வயதான ஜேக்கை அவரது அடிப்படை விலையான 50 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது டெல்லி கேபிடல்ஸ், மேலும் 2024 ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட அணியில் இடம்பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. அவர் அப்படிப்பட்ட அதிரடி வீரர் என்பது தான் காரணம். டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் சரியாக திட்டம் போட்டு ஜேக்கை டெல்லி அணிக்கு அழைத்து இருக்கிறார்.
இந்த இளம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், லிஸ்ட் ஏ (உள்ளூர் ஒருநாள் போட்டிகள்) கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 2023-24 ஆஸ்திரேலிய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் டாஸ்மேனியாவுக்கு எதிரான போட்டியில், தெற்கு ஆஸ்திரேலியாவுக்காக விளையாடும் போது ஜேக் 29 பந்துகளில் சதம் அடித்தார். அதன் மூலம் உலகிலேயே அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் செய்தார். ஒட்டுமொத்தமாக, அவர் 51 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்களுடன் 128 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலிய டி20 தொடரான பிக் பாஷ் லீக்கில் தனது அற்புதமான பேட்டிங்கிற்காக சமீபத்தில் தான் அவர் பிரபலமடைந்தார். மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடிய அவர், இரண்டு அரைசதங்களுடன் 158.64 ஸ்டிரைக் ரேட்டில் 257 ரன்கள் எடுத்தார். அவர் இந்த தொடரில் 18 சிக்ஸர்களை அடித்தார்.
அவர் ஆஸ்திரேலிய அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடி 41 என்ற அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார் மற்றும் ஒட்டுமொத்தமாக 51 ரன்களை 221.73 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார்.
ஜேக் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் அடுத்த பெரிய வீரராக வரக் கூடியவர் என்ற பெயரை எடுத்துள்ளார். மேலும், முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டனும் டெல்லி கேபிடல்ஸ் தலைமை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் அவர் அடுத்த டேவிட் வார்னராக இருக்கலாம் என்று கருதுகிறார்.