ஐபிஎல் ஏலத்தில் ஜாக்பாட் அடித்த வீரர்கள்!
அடுத்தாண்டு 10 அணிகளுடன் நடக்க இருக்கும், 17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும், மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. ஐபிஎல் அணிகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம், வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு உள்ளிட்ட பணிகள் முடிந்த நிலையில், எஞ்சிய வீரர்களை ஏலம் எடுக்கும் பணிகள் நடைபெற்றன.
ஏலம் தொடங்கியதும் கையில் மீதம் இருக்கும் பணத்துக்கு தகுந்தபடி ஐபிஎல் அணிகள் வீரர்களை ஏலம் எடுத்து வந்தனர். கடும் போட்டிக்கு மத்தியில் 24 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு மிட்சல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. மிட்செல் ஸ்டார்க்கை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இதேபோல் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு கோப்பை வென்று கொடுத்த வேகப்பந்து வீச்சாளர் பேட் கமின்ஸை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் பேட் கம்மின்சை 20 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல்லை சென்னை சூப்பர்கிங்க்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இந்திய பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேலை 11 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. நட்சத்திர பந்து வீச்சாளரான ஷர்துல் தாக்கூர் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அவரை 4 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது.
உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவையும் சென்னை அணி 1 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு தன்வசப்படுத்தியது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சமாக 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு சாம் கரன் கடந்த முறை ஏலம் எடுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த சாதனையை முறியடித்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 24 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு வரலாற்று சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.