புகார் அளிக்க சென்ற இடத்தில் மிரட்டிய போலீசார்.. தாயும், மகளும் தீக்குளித்து தற்கொலை முயற்சி..!!
காவல்துறையினர் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தாயும், மகளும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
தேனி மாவட்டம், பெரியகுளம் தாமரைக்குளம் அடுத்த அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மனைவி துளசி. இந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்கள் வசிக்கும் வீட்டின் முன் மின் கம்பி தாழ்வாக செல்வதாக கூறப்படுகிறது. அருகில் உள்ள மரக்கிளைகளில் தீப்பொறி தோன்றியதால், சண்முகநாதன், மின் வாரிய ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மின் வாரிய ஊழியர்கள், அதே பகுதியை சேர்ந்த லூகாஸ், குமார் ஆகியோர், ‘நாங்கள் இருக்கும் போது, மின் வாரிய அலுவலகத்தில் நேரடியாக புகார் தெரிவிப்பீர்களா?’ என, சண்முகநாதனை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.இதில் காயமடைந்த சண்முகநாதன், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சண்முகநாதனின் மனைவி துளசி, தென்கரை காவல் நிலையத்தில் மின்சார வாரிய ஊழியர்கள் லூகாஸ், குமார் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார். மோதல் குறித்து லூகாஸ் மற்றும் குமார் போலீசிலும் புகார் அளித்துள்ளனர். எனவே இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், ‘இந்த விவகாரத்தில் உங்கள் உறவினர் பெயரிலும் வழக்குப் பதிவு செய்வோம்’ என, துளசியிடம் போலீசார் மிரட்டி பேசியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த துளசி இன்று காலை 10 மணியளவில் பெரியகுளம் வடகரை அம்பேத்கர் சிலை முன்பு தனது 13 வயது மகளுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து இருவரையும் மீட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் 108 ஆம்புலன்சில் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.