தங்கம் விலை குறையபோகுது.. பட்ஜெட்-ல் காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!
இந்திய மக்கள் எவ்வளவு விலை உயர்ந்தாலும் தொடர்ந்து வாங்கும் பொருள் தங்கம் தான், விலை உயர்வால் வாங்கும் அளவு குறைந்தாலும் திட்டிக்கொண்டே வாங்குவதும், வாங்கிய பின்பு மகிழ்ச்சி அடைவதும் சாமானிய மக்களின் பழக்கமாகவே உள்ளது.பெரும் முதலீட்டாளர்களும், பணக்காரர்களும் பங்குச்சந்தை, அரசு பத்திரம், பிட்காயின் எனப் பலவற்றில் முதலீடு செய்தாலும் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
சமீபத்தில் Zerodha நித்தின் காமத் கூறுகையில் ஒரு குடும்பத்தின் மொத்த முதலீட்டில் 10-15 சதவீதம் தங்கத்தில் முதலீடு செய்தால் பணவீக்கம் குறித்த கவலை இருக்காது எனத் தெரிவித்தார். இது ஒவ்வொருவரின் முதலீட்டு விருப்பத்திற்கும், ரிஸ்க் அளவீட்டுக்கும் மாறுபடும்.
சரி நாம விஷயத்திற்கு வருவோம், இந்தப் பட்ஜெட்டில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மத்திய நிதியமைச்சர் இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையைத் தயாரித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் தயாராக இருக்கும் வேளையில் தங்கம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்கம் பார்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்ற நகைத் துறையினரின் நீண்டகாலக் கோரிக்கைக்கு இந்திய வர்த்தக அமைச்சகம் ஆதரவு அளித்துள்ளது என அரசு அதிகாரிகளும், தொழில்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் நலிவடைந்து வரும் நகை ஏற்றுமதிக்கு அதிகப்படியான வரி நடைமுறையில் இருப்பது பெரும் சுமையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய பட்ஜெட்டில், தங்க பார்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்கவும், கட்டணங்களைக் குறைப்பதற்கும் வர்த்தக அமைச்சகம் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் தங்க பார் மீதான வரிக் குறைப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி இடைக்காலப் பட்ஜெட்டில் அறிவிக்கலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.ரத்தின கற்கள் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (GJEPC) அனைத்து வகையான தங்கம் மீதான இறக்குமதி வரியை 15% லிருந்து 5% ஆகக் குறைக்கவும், மற்றும் இந்தியாவின் நகைக்கடைகளுக்கான செலவுகளைக் குறைக்கக் கட் மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் மீதான சுங்க வரியை குறைக்கவும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.