குடியினால் ஏற்படும் சிக்கல்.. டிக்கெட் கட்டணத்திலிருந்து கல்விக்காக 1 ரூபாய்… கிளாஸ்மேட்ஸ் பட தயாரிப்பாளர் அதிரடி!
டிக்கெட் கட்டணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்குவதாக படத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடுவார்கள். தனது படத்தின் டிக்கெட் கட்டணத்திலிருந்து ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று விஷால் பலமுறை அறிவித்திருக்கிறார். அதன்படி எவ்வளவு தொகை விவசாயிகளைச் சென்று சேர்ந்தது என்பது இன்றுவரை அறியப்படாத ரகசியமாக உள்ளது. அறிவிப்பை ஆர்ப்பாட்டமாகவும், அதன் பின்னான விஷயங்களை ரகசியமாகவும் பாதுகாக்கும் திரைநட்சத்திரங்களின் மர்மமான செயல்பாடுகளில் இதுவும் ஒன்று.
சங்கராந்தியை முன்னிட்டு தெலுங்கில் வெளியான ‘ஹனு மான்’ படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் ஐந்து ரூபாய் ராமர் கோவிலுக்கு வழங்கப்படும் என்று, அப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிரஞ்சீவி அறிவித்தார். ஹனு மான் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வடமாநிலங்களில் நல்ல வசூலை பெற்றுள்ளது. யுஎஸ்ஸில், அதிகம் வசூல் செய்த தெலுங்குப் படங்களில் முதல் ஐந்து இடத்தைப் பிடித்துள்ளது.’
சுருக்கமாக, படத்திற்கு அமோக அறுவடை. அவர்கள் எத்தனை லட்சம் (அல்லது கோடிகள்) ராமர் கோவிலுக்கு தரப்போகிறார்கள் என்பது த்ரில்லான எதிர்பார்ப்பு. இந்நிலையில், தமிழ்ப்பட தயாரிப்பாளர் கம் நடிகர், தனது படத்துக்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் ஒரு ரூபாய் குழந்தைகளின் கல்விக்காக தரப்படும் என்று அறிவித்துள்ளார். அவர், கிளாஸ்மேட்ஸ் படத்தை தயாரித்து, நாயகனாக நடித்திருக்கும் அங்கயற்கண்ணன். கிளாஸ்மேட்ஸ் என்றால், நாம் சாதாரணச் சொல்லும், வகுப்பறை கிளாஸ்மேட்ஸ் அல்ல. ஒன்றாகக் குடிக்கும் கிளாஸ்மேட்ஸ். ஆம், இது குடியின் கொடூரத்தைச் சொல்லும் படம். நடிகரும், இயக்குநருமான சரவண சக்தி படத்தை இயக்கியுள்ளார். முகவை பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் சார்பில் அங்கயற்கண்ணன் தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார்.
அவருடன் பிரணா, சாம்ஸ், அருள்தாஸ், அயலி அபி, முன்னாள் டிஜிபி ஜாங்கிட் ஆகியோர் நடித்துள்ளனர். “குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறவர்களால் தினமும் ஏதாவது பிரச்சனை குடும்பத்தில் ஏற்படுகிறது. அதை உளவியல்ரீதியாக போதனை எதுவும் இன்றி, சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் சொல்லியிருக்கிறோம்.
இந்தப் படத்தின் டிக்கெட் கட்டணத்தில் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஒரு ரூபாய் எடுத்து மதுவுக்கு அடிமையானவர்களின் குழந்தைகளின் கல்விக்காகக் கொடுக்க இருக்கிறோம்” என்றார் அங்கயற்கண்ணன். விரைவில் படம் திரைக்கு வரவிருக்கிறது.