“மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும்” – அருள் ஆறுமுகம் உறுதி
குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை சிறையில் இருந்து விடுதலையான மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளருக்கு மேல்மா கூட்டுச்சாலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் தொழில்பூங்கா 3-ம் கட்ட விரிவாக்கத் திட்டத்துக்காக அனக்காவூர் ஒன்றியம் மேல்மா ஊராட்சி உட்பட 11 ஊராட்சிகளில் உள்ள 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில், மேல்மா கூட்டு சாலையில் 120 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது நிலத்தை கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு, ஆட்சியர் பா.முருகேஷ் உள்ளிட்டோருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதனால், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை தூசி தட்டி எடுத்து 20 விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களின் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் அருள்ஆறுமுகம் உட்பட 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
இதற்கு எதிர்கட்சிகள் மற்றும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இதன் எதிரொலியாக 6 விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்தானது. ஆனால், ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யவில்லை.
இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அருள் ஆறுமுகம் விடுவிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து மேல்மா கூட்டுசாலையில் மீண்டும் தொடங்கிய 2-ம் கட்ட காத்திருப்பு போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் நேற்று வந்தார். அப்போது அவரை ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர்.
அப்போது அருள் ஆறுமுகம் கூறும்போது, “மேல்மா சிப்காட் திட்டத்தை தமிழக அரசு கைவிடும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும்” என்றார்.