அலறப்போகும் செங்கடல்.. ராணுவத்திற்கு வந்த நவீன ஏவுகணை! துல்லிய தாக்குதலுக்கு தயாரான இந்தியா?
டெல்லி: இந்தியா புதியதாக ‘நவீன தலைமுறை ஆகாஷ்’ ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்திருக்கிறது.
செங்கடல் பகுதியில் இந்திய சரக்கு கப்பல்களுக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், இந்த சோதனை எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய ராணுவம் வரிசையில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. ஆசியாவை பொறுத்த அளவில் இந்திய ராணுவம் இரண்டாவது பெரிய ராணுவமாக இருக்கிறது. எனவே ஒவ்வொரு நாளும் புதியதாக ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றன. அந்த வரிசையில் இன்று புதிய தலைமுறை ஆகாஷ் (ஆகாஷ்-என்ஜி) ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. இது மிகக் குறைந்த உயரத்தில் அதிவேக ஆளில்லா வான்வழி இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
திட எரிபொருளில் இயங்கும் ஆகாஷ் வகை ராக்கெட்டுகள் கடந்த 2021ம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் இருக்கின்றன. தற்போது சோதனை செய்யப்பட்டிருப்பது நவீன தலைமுறை ஆகாஷ் ஏவுகணையாகும், இது 70-80 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக குறி பார்த்து அழிக்கும் திறன் கொண்டதாகும். குறிப்பாக ட்ரோன் போன்ற ஆளில்லா வான் கருவிகளை அழிக்க இது பயன்படுத்தப்படுகிறது. இதன் சிறப்பம்சமே குறைவான உயரத்தில் பறந்து இலக்கை தாக்குவதுதான்.
உயரமா பறந்தால் அது ரேடாரில் சிக்கிவிடும். எனவே ஏவுகணைகளை இடைமறித்து தாக்கவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, குறைவான உயரத்தில் பறந்து இலக்கை தாக்க புதிய ஏவுகணை வடிவமைக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு திட்டமிட்டிருந்தது. இந்த திட்டத்தின் அடிப்படையிலேயே தற்போதைய ராக்கெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இதன் சிறப்பம்சமே குறைந்த உயரத்தில் பறந்து இலக்கை தாக்கி அழிக்கும் முறைதான். அதாவது குறைந்தபட்சமாக 98 அடி உயரம் முதல் அதிகபட்சமாக 45,932 அடிவரை இது பறக்கும். தற்போது செங்கடலில் இந்தியாவுக்கு வரும் கப்பல் குறி வைத்து தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே இந்த நிலையில், இதுபோன்ற ஏவுகணை பரிசோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.