கார் வாங்க சரியான டைம்.. ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடியை அறிவித்த எம்ஜி.!
புதிய ஆண்டு துவங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் நாட்டில் தங்கள் வாகனங்களை விற்பனை செய்து வரும் பல பிரபல நிறுவனங்கள் இயர்-எண்ட் ஆஃபர்களை வழங்கி வருகின்றன. அதே நேரம் பல நிறுவனங்கள் வரும் ஜனவரி முதல் தங்கள் கார்களின் விலையை உயர்த்த போவதாக அறிவித்துள்ளன.
இதில் MG Motor நிறுவனமும் ஒன்று. 2024 ஜனவரியில் வரவிருக்கும் விலை உயர்வுக்கு முன்னதாக எம்ஜி மோட்டார்ஸ் இந்த டிசம்பர் மாதத்தில் பெரிய தள்ளுபடிகளை வழங்குகிறது. December Fest என்ற பெயரில் தனது தயாரிப்புகளுக்கு டிசம்பர் 2023இல் தள்ளுபடியை அறிவித்துள்ளது நிறுவனம். இதன் ஒரு பகுதியாக ஹெக்டர், ஆஸ்டர் மற்றும் பிற எம்ஜி மோட்டார் கார்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
MG மோட்டார் அறிவித்துள்ள December Fest-ல் நிறுவனத்தின் Gloster, Astor மற்றும் ZS EV போன்ற கார் மாடல்களுக்கு மிக பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இதில் Gloster மற்றும் Astor SUV-க்கள் ரூ.1 லட்சம் நேரடி தள்ளுபடியுடன் கிடைக்கும். தவிர இந்த இரண்டு மாடல்களும் ரூ.50,000 மதிப்புள்ள எக்சேஞ்ச் பெனிஃபிட்ஸ்களுடன் இந்த டிசம்பரில் கிடைக்கிறது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட MG மோட்டரின் முதல் மின்சார வாகனமான ZS EV மாடலுக்கும் இதே போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் டிசம்பர் ஃபெஸ்ட் விற்பனை திருவிழாவின் ஆஃபர்கள் வழங்கப்படும் மற்ற மாடல்களில் நிறுவனத்தின் ஹெக்டர், ஹெக்டர் பிளஸ் மற்றும் காமெட் ஈவி (Comet EV) உள்ளிட்ட வாகனங்களும் அடங்கும். இந்தியாவில் எம்ஜி-யின் பிரபலமான மாடல்களில் ஒன்றான Hector-க்கு இந்த டிசம்பரில் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ரூ. 50,000 வரையிலான நன்மைகள் மற்றும் ரூ. 50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்டவை அடங்கும். இந்த எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆஃபரை கார் நிறுவனம் புதிய தலைமுறை ஹெக்டருக்கு வழங்குகிறது. நாட்டின் மிகவும் மலிவு விலை மின்சார வாகனமான Comet EV-க்கு டிசம்பர் 2023-ல் ரூ.65,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கு வேறு எந்த கூடுதல் நன்மைகளும் வழங்கப்படவில்லை.
ஜனவரி முதல் விலை உயர்வு : நவம்பர் வரை MG நிறுவனம் இந்தியாவில் மொத்தம் 4,154 யூனிட்ஸ்களை விற்றது, இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்கப்பட்ட 4,079 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 2 சதவீதம் அதிகம் ஆகும். இதற்கிடையே வரும் 2024, ஜனவரி முதல் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்து உள்ளதாக டிசம்பர் மாத துவக்கத்தில் MG மோட்டார் அறிவித்தது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஹெக்டர் மற்றும் க்ளோஸ்டர் ஆகிய இரண்டு பிரீமியம் எஸ்யூவி-க்களின் விலைகளை நிறுவனம் உயர்த்தியது. தொடர்ந்து உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதால் சமீபத்திய விலை உயர்வு அவசியமானதாக இருப்பதாக MG Motor குறிப்பிட்டது.