ஐடி ஊழியர்களின் சம்பளம் 65 சதவீதம் வரை உயரும்.. இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரிப்போட்..!!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தும்போது, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு திறன் பெற்ற ஊழியர்களின் சம்பளம் 54 சதவீதத்திற்கும் மேல் உயரும் என்று புதிய அறிக்கை கூறுகிறது.
இதேபோல் தகவல் தொழில்நுட்பத் துறையில் இருக்கும் ஐடி ஊழியர்களின் சம்பளம் 65 சதவீதமும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் இருக்கும் ஊழியர்களின் சம்பளம் 62 சதவீத சம்பள உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) நடத்திய ஆய்வில், இந்தியாவில் 97 சதவீத தொழிலாளர்கள் தங்களுடைய AI திறன், தங்களுடைய வேலைவாய்ப்பில் மிகவும் பாசிட்டிவ் ஆன தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் வேலைத்திறன் அதிகரிப்பதோடு, பதவி உயர்வு போன்ற வாய்ப்புகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.
புதுமைக்கான கருவி: நிதி சேவை துறை முதல் கட்டுமானத் துறை, சில்லறை விற்பனை வரை அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாகப் பரவி வருகிறது.
எனவே, இந்தியாவில் இன்னோவேஷன் கலாச்சாரத்தை உருவாக்கவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் செயற்கை நுண்ணறிவு திறன் பெற்ற பணியாளர்கள் கட்டாயம் அவசியம் என்று அமேசான் வெப் சர்வீசஸ் இந்தியாவின் பயிற்சி மற்றும் சான்றிதழ் தலைவர் அமித் மெஹ்தா தெரிவித்தார்.
தொழிலாளர்களின் ஆர்வம் அதிகம்: அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) நடந்திய இந்த ஆய்வில் 1600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் 500 நிறுவனங்கள் கலந்து கொண்டன. மேலும், 95 சதவீத இந்திய தொழிலாளர்கள் தங்களின் தொழில் வளர்ச்சிக்காகச் செயற்கை நுண்ணறிவு திறனை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
எல்லா தலைமுறையினரும் ஆர்வம்: ஜென் Z தலைமுறையில் 95 சதவீதமும், மில்லினியல் தலைமுறையில் 96 சதவீதமும், ஜென் எக்ஸ் தலைமுறையில் 93 சதவீத தொழிலாளர்கள் செயற்கை நுண்ணறிவு திறனை விரும்புகின்றனர், கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக உள்ளனர். அதேபோல், 90 சதவீதம் பேபி பூமர் தலைமுறை தொழிலாளர்கள் கூட செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டுப் படிப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
உற்பத்தித்திறன் அதிகரிப்பு: மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்துவதும் மூலம் தினமும் செய்யக்கூடிய, மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய வேலைகளை ஆட்டோமேட் செய்வதன் மூலம், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதன் மூலம், வேலை செய்யும் முறை மற்றும் முடிவுகளை மேம்படுத்துவதன் மூலம் நிறுவனத்தின் உற்பத்தித்திறன் 68 சதவீதம் அதிகரிக்க முடியும் என நம்புகின்றனர்.