சுந்தர் பிச்சை வாங்கின அதே அடி.. இப்போ மைக்ரோசாப்ட் சத்ய நாடெல்லாவுக்கும் விழுந்துள்ளது..!

சென்னை: ஒரு வருடத்திற்கு முன்பு ஏஐ என்றால் மெய்சிலிர்த்து போகும் அளவுக்கு பேசப்பட்டது, அதன் பின்பு மனிதர்களை மிஞ்சிவிடுமா, வேலை பறிபோகுமா என்று அச்சம் நிறைந்து பேச்சுக்கள் நிலவியது. தற்போது செயற்கை நுண்ணறிவு என்றால் கோளாறு, நிலையற்ற தன்மை, நம்பகத்தன்மை இல்லாத ஒன்று என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குறித்து பேச்சுதான் அதிகமாக உள்ளது.

அதிலும் முக்கியமாகக் கூகுள் ஜெமினி சேவை குறித்து அமெரிக்கா முதல் இந்தியா வரையில், கடுமையான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது, இந்தியாவில் மோடி பாசிசவாதியா என்ற கேள்விக்கும், அமெரிக்காவில் அந்நாட்டின் ஸ்தாபன தந்தை யார் என்ற கேள்விக்குமான பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வரிசையில் மைக்ரோசாப்ட் சிக்கியுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மூத்த ஊழியர் ஒருவர், நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கருவிகளில் ஒன்றின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்து, அமெரிக்க அரசாங்கத்தை விசாரணை நடத்த வலியுறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சொல்லப்போனால் சத்ய நாடெல்லா சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்டது போல் மாறியுள்ளது இந்த சம்பவம்.

மார்ச் 2023 இல் மைக்ரோசாப்ட் ChatGPT மூலம் இயங்கும் ஒரு தொழில்நுட்ப சேவை தான் “கோபிலோட் டிசைனர்” (Copilot Designer) இது டெக்ஸ்ட் அடிப்படையில் படம் உருவாக்கும் திறன்கொண்ட ஒரு ஏஐ கருவி. அதாவது நாம் பதிவிடும் வார்த்தைகளை வைத்து புகைப்படத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது. இது கிட்டத்தட்ட கூகுள் ஜெமினி சேவையில் இருந்த இமேஜ் ஜெனரேட்டர் சேவை போன்றது தான்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை மென்பொருள் பொறியியல் மேலாளர் ஷேன் ஜோன்ஸ், அமெரிக்க ஃபெடரல் ட்ரேட் கமிஷன் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுமத்திற்கு ஒரு முக்கியமான கடிதம் எழுதியுள்ளார்.

தனது கடிதத்தில், “கோபிலோட் டிசைனர்” கருவி பாலியல், வன்முறை, மது அருந்துதல் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட குழந்தைகளைக் குறிவைக்கும் காட்சிகளையும், அரசியல் சார்பு மற்றும் சதி கோட்பாடுகளைக் கொண்டு புகைப்படங்களைச் சித்தரிக்கும் திறன் உள்ளது என ஷேன் ஜோன்ஸ் தெரிவித்தார்.

இது போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதோடு, இதன் பயன்பாட்டில் இருக்கக்கூடிய ஆபத்துகள் குறித்து, குறிப்பாகப் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்குப் புரியவைக்கும் அவசியத்தையும் தனது கடிதத்தில் ஷேன் ஜோன்ஸ் வலியுறுத்தினார்.

கடந்த மூன்று மாதங்களாக நிறுவனத்திற்குள் இந்த பிரச்சினையை உள்ளுக்குள்ளே கையாண்ட முயன்ற போதிலும், பொதுப் பயன்பாட்டிலிருந்து “கோபிலோட் டிசைனர்” கருவியை நீக்குவது அல்லது போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது போன்ற எதுவும் நடக்கவில்லை.

மைக்ரோசாஃப்ட் இதில் மெத்தனமாக இருப்பதாக ஷேன் ஜோன்ஸ் தனது கடிதத்தில் தெரிவித்தார். மேலும் கோபிலோட் டிசைனர் ப்ராடெக்ட்-க்கு எச்சரிக்கைகளைச் சேர்த்தல் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோரில் அதன் ரேட்டிங்கை மாற்றுதல் போன்ற தனது பரிந்துரைகளை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாகம் ஏற்கவில்லை என்று குறிப்பிட்டு, இந்த கடிதத்தை FTC எனப்படும் அமெரிக்காவின் வர்த்தக கண்காணிப்பு மையமான ஃபெடரல் ட்ரேட் கமிஷன்-க்கு அனுப்பியுள்ளார்.

மேலும் ஷேன் ஜோன்ஸ் குற்றச்சாட்டுகள் நிறைந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட மைக்ரோசாப்ட், நிறுவனத்தின் எந்த ஊழியர் நிறுவனத்தின் சேவையில் பிரச்சனை இருப்பதாகக் கூறினாலும், அதை நிறுவனத்தின் கொள்கை, விதிமுறைகள் படி சரி செய்ய முயற்சிக்கப்படும். மேலும் ஷேன் ஜோன்ஸ் இந்த பிரச்சனைகளைக் கண்டறிந்து நிர்வாகத்திடம் கூறியதற்குப் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *