பங்கு விலை ரூ.5க்கும் குறைவு… முதலீட்டாளர்களுக்கு 222 சதவீதம் ஆதாயம் கொடுத்த நிதி நிறுவனம்.
பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் சிலர் பென்னி ஸ்டாக் பங்குகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவர். குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணமே இதற்கு காரணம்.
இது எல்லாம் நேரமும் சாத்தியம் இல்லை.இருப்பினும் சில பென்னி பங்குகள் குறுகிய காலத்தில் நல்ல ஆதாயம் கொடுத்துள்ளன. அந்த வகையில், குறுகிய காலத்தில் மல்டிபேக்கர் லாபம் கொடுத்த ஒரு பங்கு தான் ஸ்டாண்டர்ட் கேபிடல் மார்க்கெட்ஸ் (Standard Capital Markets). இந்நிறுவன பங்கின் விலை ரூ.5க்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனம் (NBFC) ஸ்டாண்டர்ட் கேபிடல் மார்க்கெட்ஸ். 1987ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 36 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.470 கோடியாக உள்ளது. இந்நிறுவன பங்கின் விலை ரூ.4 க்கும் குறைவானது.பென்னி ஸ்டாக் தான் என்றாலும் கடந்த சில காலாண்டுகளாக இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் அதிரிபுதிரியாக உள்ளது. ஸ்டாண்டர்ட் கேபிடல் மார்க்கெட்ஸ் நிறுவனம் 2023 செப்டம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.5.65 கோடியும், நிகர லாபமாக ரூ.2.31 கோடியும் ஈட்டியிருந்தது. அதேசமயம் கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.5.78 கோடியாகவும், நிகர லாபம் ரூ.3.32 கோடியாகவும் உயர்ந்துள்ளது.ஸ்டாண்டர்ட் கேபிடல் மார்க்கெட்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு 2:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை அளிக்கிறது. அதாவது முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குக்கும் 2 பங்கு போனஸாக வழங்கும். மேலும் இந்நிறுவனம் ஒரு பங்கை பத்தாக பிரித்துள்ளது.ஸ்டாண்டர்ட் கேபிடல் மார்க்கெட்ஸ் நிறுவன பங்கின் விலை தொடர்ந்து பல வர்த்தக தினங்களாக அப்பர்சர்க்கியூட்டை எட்டியது. வெள்ளிக்கிழமை மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஸ்டாண்டர்ட் கேபிடல் மார்க்கெட்ஸ் நிறுவன பங்கின் விலை அப்பர்சர்க்கியூட்டை (2 சதவீதம் உயர்ந்து) தொட்டு ரூ.3.21ஐ எட்டியது.2023 பிப்ரவரி 16ம் தேதியன்று ஸ்டாண்டர்ட் கேபிடல் மார்க்கெட்ஸ் நிறுவன பங்கின் விலை 52 வார கால குறைந்த அளவாக ரூ.0.84க்கு சரிந்தது. இருப்பினும் கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 222 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை வழங்கியுள்ளது.அதேவேளையில் கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கு 7,625 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.