தமிழக வீரர் என்னை அசத்திவிட்டார்.. கவுதம் கம்பீரால் ஏமாற்றம் தான்.. ஓபனாக சொன்ன ஜஸ்டின் லாங்கர்!
லக்னோ அணியின் ஆலோசகர் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் விலகி கேகேஆர் அணிக்கு சென்றது ஏமாற்றம் அளிப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி விளையாடிய 2 சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி லக்னோ அணி அசத்தியுள்ளது. இருப்பினும் கோப்பையை வெல்ல முடியாததால், அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய பயிற்சியாளராக ஜஸ்டிங் லாங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரது நியமனத்திற்கு கவுதம் கம்பீர் முக்கிய காரணம்.
ஏனென்றால் லக்னோ அணியின் ஆலோசகராக பணியாற்றிய கவுதம் கம்பீரின் நெருங்கிய நண்பர் ஜஸ்டிங் லாங்கர். கம்பீரின் பரிந்துரையின் பெயரிலேயே ஜஸ்டிங் லாங்கர் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் ஜஸ்டிங் லாங்கர் லக்னோ அணியில் இணைந்த பின், கவுதம் கம்பீர் கேகேஆர் அணியின் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் முதல்முறையாக ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக பணியை தொடங்கியுள்ள ஜஸ்டிங் லாங்கர் பேசுகையில், எனக்கும் கவுதம் கம்பீருக்கும் எந்த மோதலும் கிடையாது. கேகேஆர் அணிக்கு கவுதம் கம்பீர் சென்றது எனக்கு ஏமாற்றம் தான். ஆனால் கேகேஆர் அணியின் ஹீரோக்களில் கவுதம் கம்பீர் முதன்மையானவர். நாங்கள் எப்போதும் சிறந்த நண்பர்கள் தான். அதேபோல் ஐபிஎல் தொடரில் எனக்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர்.
டெல்லி அணிக்கு பயிற்சியளிக்கும் ரிக்கி பாண்டிங், சிஎஸ்கே அணிக்கு பயிற்சியாளராக செயல்படும் பிளெமிங், மைக் ஹசி ஆகியோரும் எனக்கு நண்பர்கள் தான். அதனால் நண்பர்களுடன் எனக்கு எந்த போட்டியும் கிடையாது. லக்னோ அணியில் ஏராளமான சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ஸ்பின்னர்களின் பவுலிங் என்னை மிரள வைத்துவிட்டது. ரவி பிஷ்னாய் எனர்ஜி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
அவரின் பயிற்சி முறையை பார்த்தேன். அதேபோல் அமித் மிஸ்ராவை போல் ஒரு நல்ல லெக் ஸ்பின்னரே கிடையாது. தமிழக வீரர் சித்தார்த் தான் பயிற்சி ஆட்டத்தில் முதல் மெய்டன் ஓவரை வீசினார். இதுமட்டுமல்லாமல் கிருஷ்ணப்பா கவுதம் ஆச்சரியம் அளிக்கிறார் என்று தெரிவித்துள்ளார். லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய விரும்புவதால், அந்த அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.