நடிகரை புரட்டியெடுத்த புலி : கட் சொல்ல மறந்த இயக்குனர் : சண்டை காட்சி என்ன ஆனது?
தற்போதைக காலக்கட்டத்தில் திரைப்படங்களில் விலங்குகளை பயன்படுத்தவதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும் என்ற நிலை இருந்தாலும் , விலங்குகளுடன் ஹீரோக்கள் சண்டை போடுவது போன்ற காட்சிகள் இப்போது அதிகம் இருப்பதில்லை.
ஆனால் க்ளாசிக் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்கள் நிஜ புலி மற்றும் சிங்கத்துடன் சண்டை போட்டுள்ளனர். அப்படி ஒரு படத்திற்காக நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சண்டை போட்ட சம்பவம் நடந்துள்ளது.
1958-ம் ஆண்டு எம்.ஏ.திருமுருகன் இயக்கத்தில் வெளியான படம் பிள்ளை கனியமுது. எஸ்.எஸ்.ராஜேந்திரன், இ.வி.சரோஜா, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.ராஜம் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்திற்கு, கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். படத்தை பி.எஸ்.வீரப்பா தயாரித்திருந்தார். அவர் தயாரித்த முதல் படம் இதுவாகும்.
இந்த படத்தில் எஸ்.எஸ்.ஆர் புலியுடன் சண்டை போடுவது போன்ற ஒரு காட்சி உள்ளது. அப்போது படப்பிடிப்புக்கு புலிகளை சப்ளை செய்பவர் புலிக்குட்டி கோவிந்தராஜன். படப்பிடிப்புக்கு முன் எஸ்.எஸ்.ராஜேந்திரனை சந்தித்த அவர், பயப்படாதீங்க, புலி வாய் தைச்சாச்சு, நகத்தை வெட்டியாச்சு. நீங்க தைரியமாக சண்டை போடலாம் என்று சொல்ல, அதை நம்பி எஸ்.எஸ்.ராஜேந்திரன் புலியுடன் சண்டைபோட களமிறங்கினார்.
இந்த சண்டை காட்சி படமாக்க, நேரம் செல்ல, செல்ல புலியின் வாய் தைக்கப்பட்ட தையல் பிரிய தொடங்கிய நிலையில், புலி ஆக்ரோஷமாக நாக்கை நீட்டி எஸ்.எஸ்.ராஜேந்திரனை அடிக்க தொடங்கியுள்ளது. இவரும் அதை எதிர்த்து போராடியதால் வெளியில் இருப்பவர்கள், சண்டைக்காட்சி சிறப்பாக வருகிறது என்று பார்த்துக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியாத எஸ்.எஸ்.ஆர், இவர்கள் கட் சொல்ல மாட்டார்கள் என்று நினைத்து அங்கிருந்து கட் கட் என்று கையசைத்துள்ளார்.
இதன்பிறகு படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், எஸ்.எஸ்.ராஜேந்திரன் புலியிடம் இருந்து தப்பித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு பத்திரிக்’கை பேட்டியில் பதிவு செய்துள்ளதாக பத்திரிக்கையாளரும், இயக்குனருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.