இந்த மாடல் கார்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள டொயோட்டா நிறுவனம்… என்ன காரணம் தெரியுமா?

பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் அதன் பிரபல கார் மாடல்களான இன்னோவா கிரிஸ்டா, ஃபார்ச்சூனர் மற்றும் ஹிலக்ஸ் (Hilux) ஆகிய மூன்று கார்களின் டீசல் மாடல்களை விற்பனைக்கு அனுப்புவதற்கான விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

டீசல் பவர்டிரெய்னின் சான்றிதழ் சோதனையில் சில சிக்கல்கள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, மேற்கண்ட 3 கார் மாடல்களின் டீசல் வேரியன்ட்டை டீலர்களுக்கு விற்பனைக்கு அனுப்புவதை நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் இன்னோவா கிரிஸ்டா, ஃபார்ச்சூனர் மற்றும் ஹிலக்ஸ் கார்களை உரிய கஸ்டமர்களுக்கு சொன்ன நேரத்தில் டெலிவரி கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

நிறுவனத்தின் 3 டீசல் எஞ்சின் மாடல்களில் நடத்தப்பட்ட ஹார்ஸ்பவர் அவுட்புட் சான்றிதழ் சோதனைகளில் தவறான தரவுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2.4 லிட்டர், 2.8 லிட்டர் மற்றும் 3.3 லிட்டர் ஆகிய டீசல் எஞ்சின்களே சோதனை நடைமுறைகளில் பிரச்சனையை சந்தித்துள்ளன.

டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷனுடன் (டிஎம்சி) இணைந்த டொயோட்டா இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் (டிஐசிஓ) சமீபத்தில் மேற்கண்ட மூன்று டீசல் எஞ்சின் மாடல்களில் ஹார்ஸ்பவர் அவுட்புட் சான்றிதழ் சோதனைகளில் பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டதாக அறிவித்தது.இது குறித்து பேசிய நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்த பிரச்சனை பாதிக்கப்பட்ட வாகனங்களின் உமிழ்வு அல்லது பாதுகாப்பில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று குறிப்பிட்டார்.

என்ன பிரச்சனை?

மேற்கண்ட 3 எஞ்சின்களை ECU மெஷினில் டெஸ்ட் செய்த போது நிறுவனம் குறிப்பிட்டிருந்த சரியான டேட்டாக்களையும், விற்பனைக்கு வழங்கப்பட்ட கார் மாடல்களில் பொருத்தப்பட்ட எஞ்சின்கள் அதற்கு எதிராக சற்று முரண்பாடான டேட்டாக்களை வெளிபடுத்தி இருக்கின்றன.

இந்த டேட்டா முரண்பாடுகளில் ஏற்பட்ட சிக்கலை தொடர்ந்தே 3 கார் மாடல்களை விற்பனைக்கு அனுப்புவதை நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே சிக்கலை சந்தித்துள்ள வாகனங்களின் சான்றிதழுக்காகப் பயன்படுத்தப்பட்ட தரவை மீண்டும் உறுதிப்படுத்த, தொடர்புடைய அதிகாரிகளுடன் டொயோட்டா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிகாரிகளுக்கு விரிவான விளக்கங்களை வழங்கவும், விட்னஸ் டெஸ்ட் நடத்துவது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தற்காலிகமாக தான்…

மேற்கண்ட சிக்கலை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே Hilux, Innova Crysta மற்றும் Fortuner கார்கள் விற்பனைக்காக டீலர்ஷிப்களுக்கு அனுப்பும் நடவடிக்கையை நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த நடவடிக்கை சான்றிதழ் சோதனைகளில் காணப்பட்ட முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதையும், வாகனங்களின் செயல்திறனை துல்லியமாக உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

எனினும் 3 கார் மாடல்களுக்கான புதிய ஆர்டர்கள் தொடர்ந்து ஏற்று கொள்ளப்படும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தவிர ஏற்கனவே விற்பனைக்கு அனுப்பப்பட்டு இன்னும் டெலிவரி செய்யப்படாத வாகன உரிமையாளர்களுக்கு வாகனத்தின் நிலைமை குறித்து உடனடியாகத் தெரிவிக்கப்படும் என்றும் டொயோட்டா உறுதி கூறியுள்ளது. வாடிக்கையாளர் சரி என்று ஒப்பு கொண்ட பின்னரே இந்த வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு பின் அவர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என டொயோட்டா குறிப்பிட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *