ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா!
ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து அமெரிக்கா புதன்கிழமை மற்றொரு சுற்று தாக்குதல்களை நடத்தியுள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்கப்பட்ட இலக்கு பற்றியோ எத்தனை ஏவுகணைகள் ஏவப்பட்டன என்பது பற்றியோ அவர்கள் ஏதும் கூறவில்லை.
கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியைக் கடக்கும் கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்களால் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏமனின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும், கடந்த வாரம் முதல் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை விரிவுபடுத்துவதாகவும் அச்சுறுத்தியுள்ளனர்.
முன்னதாக ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் ஏடன் வளைகுடாவில் அமெரிக்காவிற்கு சொந்தமான கப்பலைத் தாக்கியதாக அமெரிக்க ராணுவம் புதன்கிழமை கூறியது.
M/V ஜென்கோ பிகார்டி என்ற கப்பல் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயங்கள் எதுவும் இல்லை. ஆனால், சில சேதங்கள் பதிவாகியுள்ளன என்று அமெரிக்கா கூறியது.
இதனிடேய, ஏமனில் இருந்து இயங்கிவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை பயங்கரவாத குழுக்களின் பட்டியலில் சேர்க்கும் முடிவை புதன்கிழமை அமெரிக்கா எடுத்துள்ளது. இந்த வாரம் செங்கடல் பகுதியில் இயக்கப்படும் அமெரிக்க கப்பல் மீது மற்றொரு தாக்குதலை நடத்தப்போவதாகக் கூறியதை அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்ததுள்ளது எனத் தெரிகிறது.