செவிகளை சிலிர்க்க வைக்கும் குரல்.. காந்த குரலோனின் டாப் 5 பாடல்கள்.. பிறந்தநாள் வாழ்த்துகள் யேசுதாஸ்
பாடகர் யேசுதாஸ் பல வருடங்களாக இசையுலகை ஆட்சி செய்து வருபவர் யேசுதாஸ். சினிமா பாடல்கள், பக்தி பாடல்கள் என பல ஜானர்களில் தனது குரல் என்னும் கோலை கொண்டு ஆட்சி செய்யும் யேசுதாஸுக்கு இன்று 84ஆவது பிறந்தநாள். இந்த சூழலில் அவரது குரலில் எண்ணற்ற பாடல்கள் வந்தாலும் அவற்றிலிருந்து சிறந்த 5 பாடல்களை மட்டும் பார்க்கலாம்.
ஒரு பாடலுக்கு இசை உயிர் என்றால் குரல் உடல். அந்த உடல் இருந்தால்தான் உயிரால் இந்த உலகில் நடமாட முடியும், பேச முடியும். அப்படி பல வருடங்களாக தனது குரலால் இசைக்கு தொண்டாற்றி வருகிறார் யேசுதாஸ். செவிகளுக்கு இதத்தை கொடுக்கக்கூடிய யேசுதாஸ் குரல் தன்னம்பிக்கையையும் கொடுக்கும் வல்லமை கொண்டவர். அதேபோல் எந்த ஜானரில் அவரை பாட வைத்தாலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடுவார். அதனாலேயே அவரை காந்த குரலோன் என்றும் பலரும் அழைப்பார்கள்.
கேரளா பூர்வீகம்: யேசுதாஸ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். முதன்முதலாக ஜாதி பேதம் மத துவேஷம் என்ற பாடலின் மூலம் 1961ஆம் ஆண்டு அறிமுகமானார். முதல் பாடலே பால ஏற்ற இறக்கங்களை கொண்டிருந்தது. அந்தப் பாடலை இப்போது கேட்டாலும் அறிமுக பாடகர் பாடியது போல் அல்லாமல் ஏற்கனவே 100 பாடல்களை பாடியவர் பாடியது போல் பாடி ஆச்சரியப்படுத்தியிருப்பார் யேசுதாஸ்.
பல பாடல்கள்: யேசுதாஸின் முதல் பாடல் மெகா ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து வாய்ப்புகள் அவருக்கு வர ஆரம்பித்தன. அதனை பயன்படுத்திக்கொண்ட அவர் தனது குரலால் அனைவரையும் ஈர்த்தார். மலையாளத்தில் மட்டும் பாடிக்கொண்டிருந்த அவர் தமிழில் பொம்மை படத்தின் பாடல்கள் மூலம் அறிமுகமானார். ஆனால் அவர் பாடியதில் பொம்மை படத்துக்கு முன்னதாகவே கொஞ்சும் குமரி படம் வெளியாகிவிட்டதால் அதுதான் யேசுதாஸ் தமிழில் அறிமுகமான படம் என்று சொல்லப்படுகிறது.
யேசுதாஸ் விருதுகள்: தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தனது குரலால் தடம் பதித்தவர் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார். அதுமட்டுமின்றி அழகுள்ள சலீனா, தீக்கனல், சஞ்சாரி, அபிநயம், பூச்ச சன்யாசி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார். மேலும் 8 முறை தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார். இந்த சூழலில் அவர் பாடியவற்றில் சிறந்த 5 தமிழ் பாடல்களை பார்க்கலாம். அப்படி பார்ப்பது மாசமுத்திரத்தில் ஒரு குண்டூசியை தேடிக்கண்டுபிடிப்பது போன்றதுதான் என்றாலும் ஒரு சின்ன ரீவைண்டாக பார்க்கலாம்.
கண்ணே கலைமானே: யேசுதாஸ் பாடியவற்றில் ரசிகர்களிடையே பெரும் நெருக்கத்தை ஏற்படுத்திய பாடல் என்றால் மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற கண்ணே கலைமானே பாடல்தான். இளையராஜா இசையால் தாலாட்ட; கண்ணதாசன் வரிகளால் வருடிக்கொடுக்க; யேசுதாஸோ தனது குரலால் இதம் கொடுத்திருப்பார். முக்கியமாக அந்தப் பாடலில், ‘ஏழை என்றால் ஒருவகை அமைதி, ஊமை என்றால் அதில் ஒரு அமைதி’ என்ற வரியின்போது யேசுதாஸின் குரல் சஞ்சலப்பட்ட மனதுக்கு பெரும் அமைதியை கொடுக்கும். மேலும் உனக்கே உயிரானேன் எந்நாளும் என்னை நீ மறவாதே என்ற வரியை அவர் பாடும்போது எப்போதும் யேசுதாஸை மறக்க முடியாது என்பதை உணர்த்தும்.
அகரம் இப்போ சிகரம் ஆச்சு: அடுத்ததாக சிகரம் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசையில் வைரமுத்து எழுதிய, அகரம் இப்போ சிகரம் ஆச்சு பாடல். ஆச்சரியம் தரும் விதமாக எஸ்பிபி இசையமைத்த அந்தப் பாடல் யேசுதாஸ் குரலால் காலங்கடந்து நிற்கும். ‘சங்கீதமே சந்நிதி’ என்று அவர் ஹை பிட்ச் ஏற்றும் இடத்தில் எந்த வித சலிப்பும் இல்லாமல் நாமும் ஒரு மலை உச்சிக்கு சென்று ஒரு குளிர் காற்றை அனுபவித்துவிட்டு வரலாம். அதேபோல், ‘கார்காலம் வந்தால் என்ன கடும் கோடை வந்தால் என்ன மழை வெள்ளம் போகும் கரை ரெண்டும் வாழும்’ என்று வைரமுத்து எழுதிய வரிக்கு பெரிய பலம் கொடுத்து ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருப்பார் யேசுதாஸ்.
தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்: எந்த ஜானர் கொடுத்தாலும் யேசுதாஸ் கலக்கிவிடுவார் என்பதற்கு உதாரணம்தான் சிந்து பைரவி படத்தில் இடம்பெற்ற தண்ணித்தொட்டி தேடி வந்து கன்னுக்குட்டி நான். அந்தப் பாடலை கேட்ட ரசிகர்கள் யேசுதாஸால் இப்படியும் ஒரு ஃபோக் பாடலை பாட முடியுமா என்று ஆச்சரியப்பட்டுப்போனார்கள். இளையராஜாவும், வைரமுத்துவும் இசையிலும், வரியிலும் இறங்கி அடிக்க; நான் மட்டும் என்ன லேசுப்பட்டவனா என கங்கணம் கட்டிக்கொண்டு தனது குரலால் அவர்கள் இரண்டு பேரையும் விஞ்சியிருப்பார் யேசுதாஸ். குறிப்பாக பாடலின் ஆரம்பத்தில் வரும் தன்னான தன்னான தனனா என்ற தத்தகாரத்தில் உச்சம் தொட்டிருப்பார் யேசுதாஸ்.
ஹரிவராசனம்: ஐயப்பனுக்காக இயற்றிய பாடல் ஹரிவராசனம். கேரளாவும், தமிழ்நாடும் இடதுசாரி சிந்தனையும், திராவிட சிந்தனையும் ஊறிப்போன மாநிலங்கள். பாதிக்கு பாதி நாத்திகவாதிகளாக இருப்பார்கள். ஆனால் இந்தப் பாடலை கேட்டால் போதும் நாத்திகவாதிகூட ஒருமுறை யேசுதாஸுக்காக ஆத்திகவாதியாக மாறிவிடலாமோ என்ற யோசிப்பார். அந்த அளவுக்கு யேசுதாஸின் குரல் மிகப்பெரிய மாயத்தை நிகழ்த்தியிருக்கும். பெயரிலேயே கடவுளின் பெயரை வைத்திருப்பதால் என்னவோ குரலிலேயே அந்தப் பாடலின் மூலம் அமைதியை கொடுத்து கடவுளாகவே பிரவாகம் எடுத்திருப்பார் யேசுதாஸ்.
அம்மா என்றழைக்காத: இளையராஜா – யேசுதாஸ் சேர்ந்து செய்த தரமான சம்பவங்களில் ஒன்று மன்னன் படத்தில் இடம்பெற்ற ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடல். வாலி அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியையும் செதுக்கியிருப்பார். இளையராஜாவும் அபாரமாக ட்யூன் செய்திருப்பார். நிலைமை இப்படி இருக்க யேசுதாஸ் அந்தப் பாடலை தனது குரலின் மூலம் அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறார். அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்று அவர் பாட தொடங்கும்போதே நம் மனம் நமது அம்மாவை தேடி அலைபாயும். அதேபோல் நீ பட்ட துயரங்கள் அறிவேனம்மா என்று அவர் பாடுகையில் அம்மாவின் மடியை தேடி ஓடி படுத்துக்கொள்ளும் மழலையாய் மனது மாறும்.