ஹமாஸ் படைகளுக்கு எதிரான போர்… இஸ்ரேலுக்கு ஆயுதங்களை குவிக்கும் நாடுகளின் பட்டியல்
ஹமாஸ் படைகளுக்கு எதிரான இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல் நடவடிக்கைகளில் இதுவரை 30,000 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருந்தாலும், பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பல இஸ்ரேலுக்கு ஆயுதங்களை தொடர்ந்து குவித்து வருகிறது.
பிரித்தானிய ஆயுத தொழிற்சாலைகள்
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதை மேற்கத்திய நாடுகள் கைவிட வேண்டும் என்று மனிதாபிமான அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் போர் நிறுத்தம் தொடர்பிலான கோரிக்கையும் வலுத்து வருகிறது. காஸாவில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் F-35 போர் விமானங்களுக்கான 15 சதவிகித பாகங்களை பிரித்தானிய ஆயுத தொழிற்சாலைகளே வழங்கி வருகின்றன.
இது தொடர்பான ஒப்பந்தமானது கிட்டத்தட்ட 428 மில்லியன் டொலருக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2015ல் இருந்து இதுவரை 594 மில்லியன் டொலருக்கான ஆயுதங்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்ய பிரித்தானியா அனுமதி அளித்துள்ளது.
2018 முதல் 2022 வரையில் ஒரே ஒரு பிரித்தானிய நிறுவனம் மட்டும் 186 மில்லியன் டொலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த நிலையில், தற்போதைய மோசமான சூழலை கருத்தில் கொண்டு பிரித்தானிய அரசியல்வாதிகள் பலர் இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதி உரிமங்களை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டென்மார்க்கில் இருந்து 15 நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி முன்னெடுத்து வருகிறது. ஹமாஸ் படைகளுடனான சமீபத்திய போருக்கும் பல ஆண்டுகள் முன்னரே, டென்மார்க்கில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அளித்து வருகிறது.
185 புதிய ஆயுத ஏற்றுமதி உரிமம்
இஸ்ரேலின் இராணுவ இறக்குமதியில் கிட்டத்தட்ட 28 சதவீதம் ஜேர்மனியில் இருந்து முன்னெடுக்கப்படுகிறது. நவம்பர் 2023 வரையில் 323 மில்லியன் டொலர் அளவுக்கு ஆயுத ஏற்றுமதிக்கு ஜேர்மனி ஒப்புதல் அளித்துள்ளது.
ஹமாஸ் படைகளுக்கு எதிரான சமீபத்திய போர் தொடங்கிய சில வாரங்களில் 185 புதிய ஆயுத ஏற்றுமதி உரிமத்தையும் ஜேர்மனி வழங்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 226 மில்லியன் டொலர் அளவுக்கு பிரான்ஸ் ஆயுத ஏற்றுமதி செய்துள்ளது.
அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர் 21 மில்லியன் டொலர் அளவுக்கு ஆயுத ஏற்றுமதிக்கு கனடா அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 13 மில்லியன் டொலர் அளவுக்கு ஆயுத ஏற்றுமதியை அவுஸ்திரேலியா முன்னெடுத்துள்ளது.
அக்டோபர் 2023ல் மட்டும் 23.8 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்கா அளித்துள்ளது. அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர் 253.5 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்கா இஸ்ரேலுக்கு விற்றுள்ளது.
ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு 3.8 பில்லியன் மதிப்பிலான ராணுவம் மற்றும் ஏவுகணை தொடர்பான நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது.
கடந்த பிப்ரவரியில் மட்டும் 17.6 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத உதவியை முன்னெடுக்க அமெரிக்கா முடிவு செய்தது. இதற்கு முன்னர் 14.3 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.