சிக்கலில் விஜய் சேதுபதி நடிக்கும் இணையத்தொடர்…!
விஜய் சேதுபதி இந்தியில் நடித்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் 2024 ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இது தவிர விடுதலை 2, மகாராஜா மற்றும் பெயரிடப்படாத ஒரு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். அத்துடன் மணிகண்டன் இயக்கும் இணையத்தொடர் ஒன்றும் கைவசம் உள்ளது. இதில், இணையத்தொடரின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்துக்காக காக்கா முட்டை மணிகண்டன் இயக்கிவரும் காத்தான் இணையத்தொடரில் விஜய் சேதுபதி நடித்து வந்தார். மார்ச் 31 ஆம் தேதி மதுரை உசிலம்பட்டியில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார். தனது பிஸியான ஷெட்யூல்டுக்கு நடுவில் விஜய் சேதுபதி ஒதுக்கித் தந்த தேதிகளில் மணிகண்டன் படப்பிடிப்பை நடத்தி வந்தார். தற்போது டிஸ்னி ஹாட் ஸ்டார் படப்பிடிப்புக்கு பணம் தருவதை நிறுத்தியதால் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது.
தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் இணையத்தொடர்களை தேர்வு செய்ய, ஓடிடி தளங்கள் நியமித்திருக்கும் நபர்களில் 90 சதவீதத்தினருக்கு தமிழ் தெரியாது. தமிழ் ரசிகர்களின் உணர்வு குறித்தும், தமிழ் கலாச்சாரம் குறித்தும் புரிதல் இல்லாதவர்கள். இவர்களின் தலையீடால் தலைதெறிக்க ஓடியவர்கள் ஏராளம். மணிகண்டனிடம் எடுத்தவரை எடிட் செய்து காட்டுங்கள் என்று கேட்டுள்ளனர். விஜய் சேதுபதியின் கால்ஷீட் கிடைப்பது சிரமம் என்பதால் அவரது காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து படமாக்கியிருக்கிறார் மணிகண்டன். அவற்றை கோர்வையாக தொகுக்க வேண்டுமென்றால் இன்னும் பல காட்சிகள் எடுக்க வேண்டும். இதனால், அவர் முடியாது என்று கை விரிக்க, பைனான்ஸ் செய்வதை நிறுத்தியுள்ளனர்.
மணிகண்டனின் கடைசி விவசாயி படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். அவரது பின்னணி இசை மணிகண்டனுக்குப் பிடிக்காமல் போக, ஐம்பது லட்சம் செலவழித்து வெளிநாடு சென்று பின்னணி இசை சேர்த்து வந்தார். தனது கலைத்திருப்திக்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர் மணிகண்டன். இணையத்தொடர் விஷயத்தில் அவரது பிடிவாதமே ஜெயிக்கும் என்கிறார்கள்.