பிரதமர் மோடியின் உருவப்படத்தை ரத்தத்தால் வரைந்த பெண்!
பிரதமர் மோடி மார்ச் 4ஆம் தேதி (இன்று) முதல் 6ஆம் தேதி வரை தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். அந்த வகையில், காலை 10.30 மணியளவில், தெலங்கானா மாநிலம் அதிலாபாத்தில் ரூ.56,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் அதிலாபாத்தை சேர்ந்த பிரதமர் மோடியின் தீவிர ரசிகையான ஸ்வப்னா என்ற பெண், அவர் மீதான தனது அபிமானத்தை வெளிப்படுத்தும் வகையில், பிரதமர் மோடியின் உருவப்படத்தை ரத்தத்தால் வரைந்துள்ளார்.
அதிலாபாத் பொதுக்கூட்டத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்தப் படத்தை பிரதமருக்கு பரிசளிப்பேன் என்று ஸ்வப்னா தெரிவித்துள்ளார். ஸ்வப்னா ஊசி மூலம் தனது ரத்தத்தை சேகரித்து, அதன் மூலம் பிரதமரின் படத்தை வரைந்துள்ளார். இதனை சமூக வலைதளங்களில் அவர் பதிவேற்றம் செய்துள்ளார். அதுதொடர்பான, வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி இன்றும், நாளையும் தெலங்கானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதிலாபாத்தில் இன்றைய நிகழ்ச்சிக்கு பிறகு, தமிழகம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாலையில் ஹைதராபாத் திரும்பி ராஜ்பவனில் தங்கவுள்ளார். சங்கரெட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.