பயணத்தை தொடங்கிய உலகின் பிரம்மாண்ட சொகுசு கப்பல்… டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

உலகின் மிகப்பெரும் சொகுசு கப்பல் அமெரிக்காவில் தன் பயணத்தை தொடங்கியது. பிரமிப்பை ஏற்படுத்தும் “ஐகான் ஆஃப் தி சீஸ்” கப்பலின் சிறப்பம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

நூற்றாண்டு கடந்தாலும் உலக மக்களின் நெஞ்சத்தில் இருந்து நீங்காத சுற்றுலா கப்பல் என்றால் அது டைட்டானிக் தான். ஆனால், அதை விட 5 மடங்கு பெரியதாக பரந்து விரிந்து கிடக்கிறது
ராயல் கரீபியன் நிறுவனத்தின் “ஐகான் ஆஃப் தி சீஸ்” கப்பல்.

இந்திய மதிப்பில் சுமார் 16,600 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கப்பல், அமெரிக்காவின் “பிஸ்கேன் பே” துறைமுகத்தில் இருந்து வெப்பமண்டல தீவுகளுக்கு தன் முதல் பயணத்தை தொடங்கியது. இதனை கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸி தொடங்கி வைத்தார்.

20 தளங்கள் கொண்ட இந்த கப்பல் பாரீசில் உள்ள ஈஃபில் கோபுரத்தின் உயரத்தை விட அதிகமானது. 7,600 பயணிகள் மற்றும் 2,350 பணியாளர்கள் என, சுமார் 10 ஆயிரம் பேருடன் கம்பீரமாக பயணிக்கும் திறனுள்ள இந்த சொகுசு கப்பலில், 6 நீர் சறுக்குகள், 7 நீச்சல் குளங்கள், பனிச்சறுக்கு விளையாட்டரங்கம், காற்றறை கேளிக்கை விளையாட்டுகள் கவர்ந்திழுக்கின்றன.

40 உணவகங்கள், மதுக்கூடங்கள், கேசினோ உள்ளிட்ட சூதாட்டங்கள், ஆடை ஆபரணங்கள் நிறைந்த வணிக வளாகங்கள் உள்ளிட்டவை இது கப்பலா என வியப்பூட்டுகின்றன. கடல் மட்டத்தில் இருந்து 154 அடி உயரத்தில் நின்று இயற்கையை ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கப்பல், செயற்கை மரங்களுடன் ஒரு தீவே நகரும் தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

பிரமாண்ட திரையரங்கம், இசைநிகழ்ச்சி அரங்கு, குழந்தைகள் விளையாட்டரங்குகள், ஓய்வறைகள், உடற்பயிற்சி கூடங்கள், ரோப் விளையாட்டுகளுக்கும் பஞ்சமில்லை. அதிநவீன அறைகளும், அசத்தும் கட்டுமானமும் ஈர்க்கின்றன. 2 ,50,800 டன் எடை கொண்ட இந்த கப்பல், உலகின் மிகப்பெரும் சொகுசு கப்பல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த கப்பலில் 7 நாட்கள் பயணிக்கவும், அதில் உள்ள கேளிக்கைகளை பயன்படுத்திக் கொள்ளவும், இந்திய மதிப்பில் 1,40,000 ரூபாய் முதல், 11 ,80,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதில் உள்ள 6 எஞ்சின்களும் எல்.என்.ஜி எனப்படும் திரவ எரிவாயுவை கொண்டு இயங்குவதன் மூலம் மீத்தேன் வாயுவை உமிழ்வதால் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஆடம்பரம், புதுமை, எல்லையில்லா சாகசத்தின் அடையாளமாக “ஐகான் ஆஃப் த சீஸ்” கப்பல் திகழ்வதாக தெரிவித்துள்ளது ராயல் கரீபியன் நிறுவனம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *