ஆம்னி காரை கப்பலாக மாற்றிய இளைஞர்.. ரோடுலையும் இந்த காரு ஓடும்.. சென்னை வாசிகளே இத ஒன்னு வாங்கி போடுங்கப்பா!!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) இந்தியாவில் ஒரு காலத்தில் விற்பனைக்கு வழங்கிய சூப்பரான கார் மாடல்களில் ஆம்னி (Omni)-யும் ஒன்றாகும். இந்த கார் இப்போது சந்தையில் விற்பனையில் இல்லை. இருப்பினும், இந்திய சாலையில் இப்போதும் இந்த கார் பயன்பாட்டில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.
மாணவர்களை அழைத்து செல்ல உதவும் பள்ளி வாகனமாகவும், ஆபத்தில் உள்ளவர்களை மருத்துவமனை அழைத்துச் செல்ல உதவும் உயிர் காக்கும் ஆம்புலன்ஸாகவும், சரக்குகளை ஏற்றிச் செல்ல உதவும் பொதி வாகனமாகவும் இந்த வாகனம் பயன்பாட்டில் இருக்கின்றது. இது பல ரோல்களை ஆம்னி ஆற்றி வருவதனாலேயே பலரின் ஃபேவரிட் காராக ஆம்னி இருக்கின்றது.
இத்தகைய வாகனத்தையே இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தண்ணீரில் மிதக்கும், அதேவேளையில், சாலையிலும் ஓடக் கூடிய வாகனமாக மாற்றி இருக்கின்றார். இந்த மாற்றம் பலரை ஆச்சரியமடையச் செய்து இருக்கின்றது. மேலும், இந்த காரை இப்படியும் மாற்ற முடியுமா என கேட்கவும் செய்திருக்கின்றது.
அப்படி என்ன அந்த ஆம்னியில் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பதுகுறித்த விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம். கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரும்பவூர் எனும் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயின் ராஜ். இவரே மாருதி ஆம்னியின் இந்த மாற்றத்திற்கு பின்னால் இருக்கும் நபர் ஆவார்.
இவர் பழைய ஆம்னியை செகண்ட் ஹேண்டு மார்க்கெட்டில் இருந்து வாங்கியே இவ்வாறு மாற்றி இருக்கின்றார். இதற்காக பல்வேறு மாற்றங்களை ஆம்னியில் செய்திருக்கின்றார். முக்கியமாக அதனை ஜீப்-ஐ போல மாற்றி இருக்கின்றார். மேற்கூரையை முழுமையாக அகற்றிய அவர் பின்னால் இருந்து இருக்கைகளையும் அகற்றி இருக்கின்றார்.
முன் பக்கத்தில் இருந்து வழக்கமான இருக்கைகளையும் அவர் அகற்றி இருக்கின்றார். அந்த இருக்கைகளுக்கு பதிலாக வீடுகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் இருக்கைகளையே முன் பக்கத்தில் நிறுவியிருக்கின்றார். ஆகையால், ஆறு முதல் ஏழு பேர் வரை பயணிக்க வேண்டிய அந்த காரில் இப்போது இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும் எனும் நிலை உருவாகி இருக்கின்றது.
இந்த இருக்கைகளை ஏன் அவர் அகற்றினார் என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பலாம். தேவையில்லாத எடைகளை குறைக்கும் பொருட்டே அவர் அதனை வெளியேற்றி இருக்கின்றார். தோராயமாக சொல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு மாருதி சுஸுகி ஆம்னியின் இருக்கையும் 13 கிலோ வரையில் எடையைக் கொண்டிருக்கும்.
ஆனால், பிளாஸ்டிக் சேர்கள் 3 கிலோவிற்கும் குறைவாகவே இருக்கும். இந்த மாற்றங்களை மட்டுமே அவர் அந்த வாகனத்தில் நிகழ்த்தவில்லை. இன்னும் பல பெரிய பெரிய மாற்றங்களை எல்லாம் அந்த வாகனத்தில் அவர் செய்திருக்கின்றார். மிக முக்கியமாக வாகனத்தின் அடிப் பகுதியில் வாட்டர்-டைட் (தண்ணீர் புகாத) திறன் கொண்டதாக மாற்றி இருக்கின்றார்.
வாகனம் நீரில் செல்லும்போது தண்ணீர்ல உள்ளோ நுழையக் கூடாது என்பதற்காக செய்ய ஓர் சிறப்பான வேலையே இதுவாகும். இதேபோல் காரின் அடிப்பகுதியையும் அவர் சீல் செய்திருக்கின்றார் இதற்காக அவர் உலோக தாள்களை அவர் பயன்படுத்தி இருக்கின்றார். இதன் வாயிலாக காரின் அடிப்பகுதி எளிதில் துருவிற்கு இரையாவதும் தவிர்க்கப்படும்.
சரி எப்படி தண்ணீரில் அந்த வாகனம் பயணிக்கும்? இதற்காக அவர் வழக்கமான கார்களில் பயன்படுத்தப்படும் எஞ்சினையே பயன்படுத்தி இருக்கின்றார். அது நீர் புகா வண்ணம் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றது. எஞ்சினைக் கட்டுப்படுத்த அவர் அதில் ஜிப்சியின் கியர்பாக்ஸை பயன்படுத்தி இருக்கின்றார். இருப்பினும், இந்த கார் நீரில் செல்லும்போது லேசாக சிக்கலைச் சந்தித்து இருக்கின்றது.
மிக முக்கியமாக டயர்கள் வெளியில் இருப்பதால் அவர் வேகத்தில் தடையை உணர்ந்திருக்கின்றார். காரின் டயர்கள் முழுமையாக உள்ளே வரும்படி இருந்தால் இந்த ஆம்னி படகு நன்றாக இயங்கும் என்பதை ஜெயின் கூறியிருக்கின்றார். ஆனால், தான் இந்த விஷயத்திலும், எஞ்சின் விஷயத்திலும் கெட்டிக் காரன் இல்லை என்பதாலேயே இந்த சிக்கலைச் சந்தித்து வருவதாகவும், விரைவில், இதையும் கற்று அனைத்து சிக்கல்களும் அகற்றப்படும் என தெரிவித்தார்.
இந்த வாகனம் தண்ணீரில் பயணிப்பதற்கும், நீர் நிறைந்த பகுதியில் இருக்கும் சேறுகளை களம் காணவும் டிராக்டர்களில் பயன்படுத்தப்படும் டயர்களை ஜெயின் பயன்படுத்தி இருக்கின்றார். இந்த வாகன உருவாக்கத்தில் பல்வேறு சிக்கல்களை அவர் சந்தித்து இருக்கின்றார். மிக முக்கியமாக எஞ்சினை சரியான இடத்தில் பொருத்தும் விஷயத்தில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து இருக்கின்றார்.
ஏனெனில் நீரில் மிதக்கும் வாகனங்களுக்கு எடை என்பது மிகவும் முக்கியமானதாகும். அது ஒரே இடத்தில் குவிந்திருக்கும் என்றால் நீரில் மிதப்பதற்கு பதிலாக வாகனத்தை மூழ்க செய்துவிடும். எனவே இந்த எடை பகிர்மானத்தில் அவர் மிகப் பெரிய சிக்கலையும்,தொய்வையும் சந்தித்து இருக்கின்றார். இதுதவிர, வாகனத்தின் அதிர்வுகளாலும் அவர் சில சிக்கல்களைச் சந்தித்து இருக்கின்றார். இதுபோன்ற பல தடைகளுக்கு பின்னரே தண்ணீரில் மிதக்கும் மற்றும் சாலையில் இயங்கும் ஆம்னியை அவர் ரெடி செய்திருக்கின்றார்.