திரையரங்கில் நடக்கும் ஹாரர் கதை: ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
‘எரும சாணி’ புகழ் ரமேஷ் வெங்கட் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. சத்தியமூர்த்தி, யூடியூபர்கள் விஜய், ஹரிஜா, ‘பரிதாபங்கள்’ கோபி-சுதாகர், கார்த்திக், ரித்விகா, யாஷிகா ஆனந்த், முனிஷ்காந்த், ஷா ரா உட்பட பலர் இதில் நடித்துள்ளனர்.
ஜோஷுவா ஜெ பெரேஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு கவுஷிக் கிரிஷ் இசை அமைத்துள்ளார். வரும் 29-ம்தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி இயக்குநர் ரமேஷ் வெங்கட் கூறியதாவது:
இது ஹாரர், காமெடி படம். ஒரே இரவில் திரையரங்கில் நடக்கும் கதை. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி இருக்கிறோம். படம் பார்க்கத் திரையரங்குக்கு வரும் சிலர் அங்கிருக்கும் நான்கு பேயிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அவற்றின் பிடியில் இருந்து ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கலகலப்பாகச் சொல்லியிருக்கிறோம்.
கிளைமாக்ஸ் புதுமையாக இருக்கும். முனிஷ்காந்த் வில்லனாக நடித்திருக்கிறார். 80 சதவிகித காட்சிகள் திரையரங்கில்தான் நடக்கிறது என்பதால் சென்னை பெரம்பூரில் உள்ள திரையரங்கு ஒன்றில் காட்சிகளைப் படமாக்கினோம். பொதுவாக ஹாரர் காமெடிக்கென இருக்கும் ‘டெம்பிளேட்’ இதில் இருந்தாலும் பேய் விஷயத்தில் புதுமை இருக்கும். படத்தில் கருத்து என்று எதுவும் இல்லை. முழு பொழுதுபோக்கு படமாக இருக்கும். யூடியூப்பில் இருந்து படம் இயக்க வந்ததால் இந்தப் படத்தின் மூலம் சினிமாவை நிறைய கற்றுக் கொண்டேன். சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்போது, வரும் 29-ம் தேதி வெளியாகிறது. இவ்வாறு ரமேஷ் வெங்கட் கூறினார்.