2 போட்டி தான் ஆகி இருக்கு.. கொஞ்சம் பொறுங்க! ஆரஞ்ச் நிற தொப்பிக்காக விளையாடவில்லை.. கோலி விளக்கம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர் சி பி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் அபாரமாக விளையாடி 49 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ஆர் சி பி அணி தங்களுடைய முதல் வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்கள் அடித்திருக்கும் வீரர் என்றால் அது விராட் கோலி தான். அது மட்டுமில்லாமல் நடப்பு சீசனில் இரண்டு போட்டிகள் தற்போது முடிவடைந்த நிலையில் விராட் கோலிக்கு ஆரஞ்சு நிற தொப்பி இன்று வழங்கப்பட்டது.
அப்போது ரசிகர்கள் பலரும் கத்தி கூச்சலிட்டனர். உடனே ரசிகர்களை பார்த்து பேசிய விராட் கோலி, ரொம்பவும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். தற்போது இரண்டு போட்டிகள் தான் முடிவடைந்து இருக்கிறது. ஆரஞ்சு நிற தொப்பி ரசிகர்களாகிய உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று எனக்கு தெரியும். ஆனால் இன்னும் பல போட்டிகள் இன்னும் இருக்கிறது. அதில் நான் சிறப்பாக விளையாட வேண்டும்.
அதுவரை கொஞ்சம் காத்திருங்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நான் எப்போதுமே இதுபோல் ஆரஞ்சு நிறத் தொப்பிக்காகவும் சாதனைகளை படைக்க வேண்டும் என்பதற்காகவும் விளையாடுவதில்லை. இந்தியாவுக்கு விளையாடுவதாக இருந்தாலும் சரி, ஆர்சிபிக்கு சார்பாக விளையாடுவதாக இருந்தாலும் சரி என் அணி வெற்றி பெற வேண்டும்.
அதற்கு நான் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதற்காகத்தான் நான் விளையாடுகின்றேன். டி20 கிரிக்கெட்டில் தற்போது நான் தொடக்க வீரராக களமிறங்குகிறேன். இதனால் நான் நல்ல அடித்தளத்தையும் அதிரடியான தொடக்கத்தையும் கொடுக்க முயற்சி செய்கிறேன். அப்போது விக்கெட்டுகள் விழுந்தால் உடனே சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் நான் விளையாட நினைக்கின்றேன்.
இன்றைய ஆடுகளம் மிகவும் பேட்டிங்கிற்கு சாதகமானதாக எல்லாம் இல்லை. சரியான கிரிக்கெட் ஷாட் விளையாடினால், மட்டுமே உங்களுக்கு ரன்கள் கிடைக்கும். இன்றைய ஆட்டத்தில் நான் பாதியில் ஆட்டம் இழந்தது எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. நான் கடைசி வரை நின்று அணியை வெற்றி பெற வைத்திருக்க வேண்டும். பவுண்டரி கிடைக்கும் என அடித்த பந்து கேட்ச் ஆகிவிட்டது. இருப்பினும் இரண்டு மாத ஓய்வுக்குப் பிறகு திரும்பி இப்படி விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேக்ஸ்வெல், அனுஜ் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதனால் நான் கொஞ்சம் பெரிய சாட் ஆட வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று விராட் கோலி கூறியுள்ளார்.