அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை.. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
அவனியாபுரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது..
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி இந்த ஆண்டும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தான் நடைபெறும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. அவனியாபுரத்தில் வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியை, கிராம கமிட்டி அமைத்து நடத்த உத்தரவிடக் கோரி பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகள் கிராம கமிட்டி மூலம் நடத்தப்படும் நிலையில், அவனியாபுரத்தில் மட்டும் 2 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட சமாதானக் குழு அவனியாபுரத்தில் உள்ள அனைத்து சமூக மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது.
அதில், சட்டம், ஒழுங்கு பிரச்னையை தவிர்க்க இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டை நடத்த ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு , நடப்பாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் குழுவே நடத்தும் என உத்தரவிட்டனர்.
இதனிடையே, அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிகட்டுகளில் காளை உரிமையாளர்களுக்கு டோக்கன் வழங்கும் ஆன்லைன் செயல்முறையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.