வருவாய்த்துறையினரின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்தகைய மோசடி நடைபெற வாய்ப்பே இல்லை : அன்புமணி பாய்ச்சல்..!

கடந்த ஓராண்டில் முதியோர்களுக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டிய உதவி தொகை 27 லட்சம் ரூபாய் முதியோர்களின் பேங்க் அக்கவுண்டில் செலுத்தப்படுவதற்கு பதிலாக தற்காலிக கணினி ஆபரேட்டராக பணியாற்றி வந்தவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளின் பேங்க் அக்கவுண்ட் உடன் அவர்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. அதனால், பயனாளிகள் யாராவது உயிரிழந்தால் அவர்களின் வங்கிக் கணக்குகள் தானாக செயலிழந்து விடும். அவ்வாறு செயலிழந்த வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் முதியோர் உதவித் தொகை அரசின் கணக்கிற்கே மீண்டும் திரும்பி வரும் வகையில் வசதி செய்யப்பட்டு உள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு திரும்பி வந்த தொகை அரசின் கணக்கில் வரவு வைக்கப்படாமல் சிறப்பு வட்டாட்சியர் ஒருவரின் அலுவலகத்தில் பணி செய்யும் தற்காலிக பணியாளர் ஒருவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அன்புமணி, “வருவாய்த்துறை உயர் அதிகாரிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் இல்லாமல் இத்தகைய மோசடிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து, “வேறு சில மாவட்டங்களிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. அரசின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட வேண்டிய தொகை தனி நபர் ஒருவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது எப்படி? இத்தகைய பரிமாற்றங்களை தற்காலிக பணியாளர் ஒருவர் எப்படி செய்ய முடியும்? அதிகாரிகள் இந்த முறைகேட்டை கண்காணித்துத் தடுக்க தவறினார்களா? அல்லது முறைகேட்டுக்கு துணை போனார்களா? உள்ளிட்ட கேள்விகளுக்கு அரசுத் தரப்பிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

ஓரு வருடத்திற்கும் மேலாக முறைகேடு நடைபெற்று வந்த நிலையில், இப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரை யார் மீதும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மோசடிக்கு காரணமானவர்கள் யார்? அதற்கு துணை போனவர்கள் யார்?

தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டங்களில் எல்லாம் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளன? என்பது குறித்து விரிவான விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். முறைகேட்டில் தொடர்புடைய நபர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *