தமிழ் வழியில் படித்தால் வேலை இல்லையா.. 6 ஆண்டுகள் காலம் தாழ்த்தியாச்சு! சீறும் ராமதாஸ்
சென்னை: தமிழ் வழியில் படித்தால் வேலை இல்லையா? 6 ஆண்டாக வழங்கப்படாத சிறப்பாசிரியர் பணி ஆணைகளை உடனே வழங்குங்கள் என பா.ம.க.
நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய பாடங்களுக்கான சிறப்பாசிரியர் பணிக்கு, தமிழ்வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டில், தேர்வு செய்யப்பட்டோருக்கு 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணியமர்த்தல் ஆணை வழங்கப்படவில்லை.
பிற பிரிவினருக்கு பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில், நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட இல்லாத காரணங்களைக் கூறி, தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டும், பணி ஆணைகள் வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் அரசு உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை ஆகிய பாடங்களுக்கு 1325 சிறப்பாசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த 26.07.2017-ஆம் நாள் வெளியிடப்பட்டு, 23.09.2017-ஆம் நாள் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன.
அதனடிப்படையில் தையல், ஓவியம், இசை ஆகிய பாடங்களுக்கான சிறப்பாசியர்கள் கடந்த 2019-ஆம் ஆண்டிலும், உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்கள் 2020-ஆம் ஆண்டிலும் நிரப்பப்பட்டன. ஆனால், தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேருக்கு மட்டும் 6 ஆண்டுகளுக்கும் மேலாகியும் பணி ஆணை வழங்காமல் தேர்வு வாரியம் தாமதித்து வருகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இவ்வளவு நீண்ட தாமதத்திற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தெரிவுப் பட்டியல் வெளியிடப்பட்ட போதே, தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலும் வெளியிடப் பட்டது. ஆனால், அதை எதிர்த்து சிலர் வழக்கு தொடர்ந்ததையடுத்து தெரிவுப்பட்டியல் கைவிடப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, அந்தத் தீர்ப்புக்கு ஏற்ற வகையில் அடுத்தப்பட்ட நடவடிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் மறுக்கிறது. அதற்கான காரணம் தான் தெரியவில்லை.
தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேருக்கு பணி ஆணைகளை வழங்குவதில் செய்யப்படும் தாமதம் குறித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12&ஆம் நாள் விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதன் பிறகாவது சிறப்பாசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் வழியில் படித்தவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கலாம்.
அப்பட்டியலை வெளியிடுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதற்கான காரணத்தையாவது தெரிவித்து இருக்கலாம்.