`அழைப்பிதழில் பெயர் இல்லை; இடறிய கால்’ – கோபத்தில் காவலரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்.எல்.ஏ!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சசூன் மருத்துவமனையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் துணை முதல்வர் அஜித் பவார், மருத்துவ கல்வித்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரீப், தேசியவாத காங்கிரஸ் எம்.பி.சுனில் தட்காரே ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அழைப்பிதழில் புனே கண்டோண்ட்மெண்ட் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ.சுனில் காம்ப்ளே பெயர் போடவில்லை. ஆனால் விழாவுக்கு வந்திருந்தார். அவருக்கு மேடையில் பின்புறம் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே அழைப்பிதழில் பெயர் போடாததால் கடுப்பில் இருந்த எம்.எல்.ஏ. மேடையில் இருக்கையும் பின்னால் போடப்பட்டு இருந்ததால்அவர் மேலும் கோபம் அடைந்தார்.
இதனால் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது கடும் கோபத்தில் இருந்தார். மேடைக்கு கீழே நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த காவலர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். பின்னர், நிகழ்ச்சியின் நடுவே மேடையில் இருந்து எழுந்த சுனில் காம்ப்ளே கீழே இறங்கிச்சென்றார். அப்போது அவர் கால் இடறியது. ஆனால் இதற்கு சம்பந்தமே இல்லாத அந்த காவலரை ஓங்கி அடித்துவிட்டார். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் ஒருவரையும் சுனில் காம்ப்ளே அடித்தார்.
ஏன் காவலரை அடித்தீர்கள் என்று எம்.எல்.ஏ.விடம் கேட்டதற்கு, ”நான் ஏன் அவரை அடிக்கவேண்டும். எனக்கு அவரை யார் என்றே தெரியாது. நான் மேடையில் இருந்து கீழே இறங்கும்போது அவர் என் மீது விழுந்துவிட்டார். நான் அவரை தள்ளிவிட்டேன்” என்று தெரிவித்தார். அழைப்பிதழில் ஏன் உள்ளூர் எம்.எல்.ஏ.பெயர் போடவில்லை என்று கேள்விக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இந்த நிகழ்ச்சி தேசியவாத காங்கிரஸ் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது.
எனவேதான் திட்டமிட்டு பா.ஜ.க.எம்.எல்.ஏ.பெயரை அழைப்பிதழில் போடாமல் விட்டுள்ளதாக கூறப்படுகிறது. காவலரை அடித்த எம்.எல்.ஏ.மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
BJP MLA Sunil Kamble slapped a Police personnel during an event at Sassoon Hospital in Pune today.
Without delay, a case has been registered against MLA Sunil Kamble under IPC section 353 (assault or criminal force to deter public servant from discharge of his duty). pic.twitter.com/ClXsR5TtHi
— Megh Updates 🚨™ (@MeghUpdates) January 6, 2024