“பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியமில்லை” – சென்னை உயர் நீதிமன்றம்
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை பொன்முடி இழந்துள்ளார். முன்னதாக, இதே வழக்கு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தபோது பொன்முடி விடுதலை செய்யப்பட்டதோடு, அவரின் சொத்துக்களும் முடக்கப்படாமல் விடுவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில்தான் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதே விவகாரத்தில் கீழமை நீதிமன்றம் பொன்முடியின் சொத்துக்களை விடுவித்ததை ரத்து செய்வதோடு அவரின் சொத்துக்களை மீண்டும் முடக்க வேண்டும் என 2017-ம் ஆண்டே லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தான் தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த அந்த உத்தரவில், ‘சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் முடக்க வேண்டியது தேவையற்றது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் அதனை தற்போது மாற்ற முடியாது. தேவைப்பட்டால் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி: தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி கடந்த 2006-2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியின்போது உயர்கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விசாரித்து, பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, இருவரையும் கடந்த 2016-ல் விடுதலை செய்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறைகடந்த 2017-ம் ஆண்டு மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் கடந்த 19-ம் தேதி பொன்முடி, விசாலாட்சி ஆகிய இருவரையும் குற்றவாளிகள் எனஅறிவித்து தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக இருவரும் டிச.21-ம் தேதி (நேற்று) ஆஜராக உத்தரவிட்டிருந்தார். பின்னர் வழங்கப்பட்ட தீர்ப்பில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை, ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை பொன்முடி இழந்துள்ளார்.