இந்தியாவை ஒரு வழி பண்ணாம விட போறது இல்ல!! சீன கார் நிறுவனம் வெச்சிருக்கும் ஒவ்வொரு பிளானும் தீயாய் இருக்கு!
சீனாவை சேர்ந்த பிஒய்டி (BYD) இந்தியாவில் அதன் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. இதன்படி, பிஒய்டி அடுத்ததாக இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படும் 3 புதிய எலக்ட்ரிக் கார்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
சீனாவை சேர்ந்த எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி இந்தியாவில் கார்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக மாற வேண்டும் என்பதில் முனைப்புடன் உள்ளது. இந்தியாவிற்கான பிஒய்டி நிறுவனத்தின் துணை தலைவர் ஜி சஞ்சய், அடுத்த 3 வருடங்களில் இந்தியாவின் எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் 85% வரையில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு முன்னேற்றம் காண வேண்டும் என்பது பிஒய்டி நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது என கூறியுள்ளார்.
இதற்கு ஏற்றவாறு, இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகமாக உள்ள பகுதிகளில் கூடுதல் விற்பனை மையங்களை திறப்பதில் பிஒய்டி நிறுவனம் தீவிரமாக உள்ளது. சீல் என்ற பெயரிலான புதிய எலக்ட்ரிக் செடான் கார் பிஒய்டி நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
சர்வதேச சந்தையில் டெஸ்லா மாடல் 3 என்ற மிக பிரபலமான எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக விளங்கும் பிஒய்டி சீல் இந்தியாவில் நிறைய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் என பிஒய்டி நம்பிக்கை கொண்டுள்ளது. இதுகுறித்து பேசிய சஞ்சய், இந்தியாவில் தற்சமயம் நிறைய எலக்ட்ரிக் செடான் கார்கள் விற்பனையில் இல்லை, இது எங்களுக்கு நல்ல விஷயமாக இருக்கும் என்றார்.
2024ஆம் ஆண்டை சீல் எலக்ட்ரிக் கார் மூலமாக துவங்கியுள்ள பிஒய்டி நிறுவனம் அடுத்ததாக மேலும் சில புதிய எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இதன்படி, 7 இருக்கைகளை கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவி காரான டேங்க் மாடலை அடுத்ததாக இந்தியாவில் பிஒய்டி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அத்துடன், சீல் எலக்ட்ரிக் செடான் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சீல் யு எலக்ட்ரிக் காரும் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. சீல் யு எலக்ட்ரிக் கார் சமீபத்தில்தான் ஐரோப்பாவில் மேம்படுத்தப்பட்ட வெர்சனில் வெளியீடு செய்யப்பட்டது. அங்கு விரைவில் விற்பனையை துவங்கவுள்ள புதிய சீல் யு எலக்ட்ரிக் கார் அதனை தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இவை மட்டுமின்றி, சீ லயன் என்ற மற்றொரு எலக்ட்ரிக் எஸ்யூவி காரையும் இந்தியாவில் பிஒய்டி அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. டேங்க், சீல் யு மற்றும் சீ லயன் எலக்ட்ரிக் கார்கள் சர்வதேச மார்க்கெட்டில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. இதனால், இவை இந்திய மக்களையும் கவரும் என்கிற நம்பிக்கையில் பிஒய்டி உள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முக்கிய நிறுவனமாக விளங்க வேண்டுமெனில், அதற்கு முதலில் இந்தியாவில் அசெம்பிளி லைனை பிஒய்டி நிறுவனம் கொண்டுவர வேண்டும். அதாவது, எலக்ட்ரிக் கார்களை முழுவதுமாக வெளிநாட்டில் உற்பத்தி செய்து இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கு பதிலாக, இந்தியாவிலேயே எலக்ட்ரிக் கார்களை உருவாக்க பிஒய்டி முயல வேண்டும்.