திங்கள் & வெள்ளியில் WFH கிடையாது.. டாய்ச் வங்கி உத்தரவால் ஐடி ஊழியர்கள் சோகம்..!
கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு போடப்பட்டது. இதனை அடுத்து ஐடி, வங்கி துறை என பல்வேறு துறையினர் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
WORK FROM HOME என்பது பெருந்தொற்று காலத்தில் மிகவும் பிரபலமடைந்தது. வைரஸ் பரவல் அச்சுறுத்தல் விலக தொடங்கியதை அடுத்து பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கே வந்து பணியாற்ற கூறுகின்றன. இதற்கு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பும் ஆதரவு நிலவி வருகிறது.
டாய்ச் வங்கி: உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான டாய்ச் வங்கி work from home அதாவது வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான கொள்கையில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை அறிவித்துள்ளது.
இதன்படி ஊழியர்கள் அனைவரும் திங்கள்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும். இதன் மூலம் அலுவலகத்தில் வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் ஊழியர்கள் பணிபுரிவதற்கான நிலை உருவாகும் என அந்த வங்கி தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் முதல் இது நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஊழியர்கள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் வீடுகளில் இருந்து பணிபுரிவதால் , அலுவலகங்கள் முறையாக பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. ஐடி ஊழியர்கள் அனைவரும் இந்த சலுகையில் தான் தப்பித்து வரும் நிலையில் டாய்ச் வங்கி இதற்கு வேட்டு வைத்துள்ளது. இதை பிற கார்ப்ரேட் நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த வாய்ப்பு உள்ளது.
எனவே அலுவலக இடங்களையும் பயன்படுத்த வேண்டும், ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பையும் விடக் கூடாது என்ற நோக்கில் தான் டாய்ச் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக ப்ளூம்பெர்க் நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.
ஹைபிரிட் மாடல் பணி: கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தே பணிபுரிவது பிரபலமானது. பெரும்பாலான ஊழியர்கள் அந்த மனநிலைக்கே மாறினர். ஆனால் தொற்று முடிந்த உடன் நிறுவனங்கள் அவர்களை வேலைக்கு அலுவலகம் வர வேண்டும் என கூறின.
இதற்கு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பும் எழுந்தது. எனவே பல்வேறு நிறுவனங்கள் ஹைபிரிட் என்ற முறையை அறிமுகம் செய்தன. அதாவது வாரத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு ஊழியர்கள் வீட்டில் இருந்த பணிபுரியலாம், ஆனால் நிறுவனம் குறிப்பிடும் நாட்களுக்கு அலுவலகத்திற்கு நேரில் வந்து தான் பணிபுரிய வேண்டும் என அறிவித்தன. தற்போது ஐடி நிறுவனங்களில் பெரும்பாலும் ஹைபிரிட் முறையே பின்பற்றப்படுகிறது.
டாய்ச் வங்கியின் புதிய அறிவிப்பின் மூலம் , மேலாண்மை இயக்குநர்கள் கட்டாயம் வாரத்தில் நான்கு நாட்களுக்கு அலுவலகத்திற்கு வரவேண்டும். அதுவே ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை தவிர உள்ள நாட்கள் வீட்டில் இருந்தே பணிபுரியலாம்.
1870ஆம் ஆண்டு பெர்லின் நகரில் தொடங்கப்பட்ட டாய்ச் வங்கி ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு முன்னணி வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனமாகும்.