இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பர் ராகுல் கிடையாது.. இளம் வீரரை இறக்கும் பிசிசிஐ
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 13 வருடங்கள் கழித்து அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா சமன் செய்து அசத்தியது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அந்த தொடரின் கோப்பையை பகிர்ந்து கொண்ட இந்தியா புள்ளி பட்டியலிலும் 2வது இடத்திற்கு முன்னேறியது. இதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.
இந்த தொடரில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டி20 போல அதிரடியாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து கண்டிப்பாக இந்தியாவுக்கு புதிய சவாலை கொடுக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். அதே சமயம் கடந்த 12 வருடங்களாக சொந்த மண்ணில் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் இருந்து வரும் மிகப்பெரிய கௌரவத்தை இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நிறைவு பெற்ற தென்னாப்பிரிக்க தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடிய கேஎல் ராகுல் சிறப்பாக செயல்பட்டு வெற்றியில் பங்காற்றி நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனாலும் தென்னாப்பிரிக்காவில் பெரும்பாலும் வேகத்துக்கு சாதகமான மைதானங்களில் விக்கெட் கீப்பர்கள் துல்லியமாக செயல்பட வேண்டும் என்ற அவசியமில்லை.
அதனால் பகுதி நேர விக்கெட் கீப்பரான அவர் அந்த தொடரில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக சிறப்பாக விளையாடி நிலைமையை சமாளித்தார். இருப்பினும் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் பெரும்பாலான போட்டிகள் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதில் முழு நேர விக்கெட் கீப்பரை களமிறக்க பிசிசிஐ விரும்புவதாக கிரிக்பஸ் இணையத்தில் செய்து வெளியாகியுள்ளது.
அந்த சூழ்நிலையில் இஷான் கிசான் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளிலும் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதனால் கடந்த தென்னாபிரிக்க தொடரில் சொந்த காரணங்களுக்காக விலகிய நீங்கள் தற்போது நடைபெற்று வரும் 2024 ரஞ்சிக் கோப்பையில் விளையாடி முழுமையான ஃபார்முக்கு திரும்பி தயாராக இருக்குமாறு இஷான் கிஷானுக்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மறுபுறம் அதன் காரணமாக கடந்த முறை விக்கெட் கீப்பராக விளையாடிய கேஎல் ராகுல் இம்முறை ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாட உள்ளார். மேலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் உங்களை தேர்வு செய்ய வேண்டுமெனில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுங்கள் என்று மற்றொரு மிடில் ஆர்டர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.