குடிக்க தண்ணீர் இருக்கும்.. அது கட்டப்பட்டிருக்கும். எடுத்து குடித்தால் வாய் வரை கூட வராது – கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை விமர்சித்த ஜெயக்குமார்..!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நாள் முதல் பிரச்சனைகளும், சர்ச்சைகளும் வந்து கொண்டே தான் உள்ளன. அதே சமயம் அரசும் பல வசதிகளை செய்து கொண்டு தான் உள்ளன.
மக்களோ கோயம்பேட்டை விட பல மடங்கு பெரிதாக கட்டப்பட்டாலும், சரிவர பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். அதேபோல, பேருந்து நிலையத்தில் பல அடிப்படை வசதிகளும் இல்லை என்ற புகாரையும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்து கூறியதாவது:
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தான் எல்லா வசதிகளுமே இருக்குங்க. உங்களுக்கு தெரியாதா? பாத்ரூம் இருக்கும் அதில் பேசினும் இருக்கும். ஆனால் அழுத்தினால் தண்ணீர் மட்டும்தான் வராது. குடிக்க தண்ணீர் இருக்கும்.. டம்பளில் செயின் கட்டப்பட்டிருக்கும். எடுத்து குடித்தால் வாய் வரை கூட அது வராது. இந்த லட்சணத்தில் தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கட்டி வைத்திருக்கிறார்கள்.
இவ்வளவு மக்கள் வரும் இடத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வண்டியாவது இருக்கிறதா.. கிடையாது. எல்லாமே விலை உயர்ந்த ஓட்டல்கள் தான் இருக்கின்றன. 500, 1000 ரூபாய் கொடுத்து சாப்பிடும் நிலையிலா நம் மக்கள் இருக்கிறார்கள்? அம்மா உணவகம் திறக்க வேண்டியது தானே.புறநகர் பஸ்களை பிடிக்க 2 கி.மீ. தூரம் நடக்க வேண்டி இருக்கு.கிளாம்பாக்கத்தில் இருந்து சிட்டிக்குள் வருவதற்கே கார், ஆட்டோவுக்கு 1000 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.