இந்த 4 பிரிவினர் நலனுக்குத்தான் முன்னுரிமை.. இடைக்கால பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் சூசகம்
பிப்ரவரி 1ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த இடைக்கால பட்ஜெட் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.இந்த சூழ்நிலையில், அரசின் கொள்கைகள் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த 4 பிரிவினரின் நலனை மனதில் வைத்தே இடைக்கால பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருத்து எழுந்துள்ளது.
டெல்லி இந்து கல்லூரியின் 125வது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் கூறியதாவது: இளைஞர்கள், பெண்கள், நமக்கு உணவு பாதுகாப்பை வழங்கும் நல்ல விவசாயிகள் மற்றும் துரதிர்ஷ்டவசமான ஏழைகள் முன்னேற அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் ஆதரவு தேவை.எனவே இந்த நான்கு பிரிவினருக்கு மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், எல்லாமே அவர்களின் முன்னேற்றத்தை நோக்கியே இருக்கும். சாதி, சமூகம் அல்லது மதத்தை கருத்தில் கொள்ளாமல் அவர்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படும்.திறமையை மேம்படுத்துவதற்கும், விவசாய கருவிகளை மேம்படுத்துவதற்கும், குடிமக்களுக்கு சுகாதாரம் மற்றும் பிற சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அவற்றை பெறுவதற்கு உண்மையில் தகுதியுடைய ஒவ்வொருவரும் அதை பெற வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும், ஒவ்வொரு உள்ளூர் திறமையும், வெளிவரும் ஒவ்வொரு தயாரிப்பும் சந்தையை கண்டறிய வேண்டும் என்பதையும் சமமாக உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.அறுவடைக்கு பிந்தைய நடைமுறைகளை நவீனமயமாக்குவது மிகவும் அவசியம். இந்த துறைகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பட்ஜெட்டில் மட்டுமல்ல ஆர் அண்டு டி-ஐ மேம்படுத்தவும், சிறந்த நிபுணர்களை ஆலோசகர்களாக கொண்டு வரவும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை (சிபிடிசி) மேம்படுத்துவதற்கு அரசாங்கமும், இந்திய ரிசர்வ் வங்கியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.