அதிகம் விற்பனையாகும் டாப்-5 காம்பேக்ட் எஸ்யூவி-க்கள் இவைதான்! முதலிடத்தில் இருப்பது எந்த கார் தெரியுமா?
இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டு மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-5 காம்பேக்ட் எஸ்யூவி (Top-5 Compact SUVs) கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மாருதி சுஸுகி நிறுவனம் 1,30,563 பிரெஸ்ஸா கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.
ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு 1,70,588 ஆக உயர்ந்துள்ளது. இது 31 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த பட்டியலில் டாடா நெக்ஸான் (Tata Nexon) கார் 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு 1,68,278 ஆக இருந்த டாடா நெக்ஸான் காரின் விற்பனை எண்ணிக்கை, கடந்த 2023ம் ஆண்டு 1,70,311 ஆக உயர்ந்துள்ளது. இது 1 சதவீத வளர்ச்சி ஆகும்.
டாடா நெக்ஸான் காரானது நூலிழையில்தான் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரிடம் முதலிடத்தை பறிகொடுத்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். சரி, இந்த பட்டியலில் டாடா பன்ச் (Tata Punch) காரானது, 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1,29,895 பன்ச் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.
ஆனால் இந்த எண்ணிக்கையானது, 1,50,182 ஆக உயர்ந்துள்ளது. இது 16 சதவீத வளர்ச்சி ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. எனவே வரும் காலங்களில் டாடா பன்ச் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்டியலில் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) கார், 4வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் 1,20,703 வெனியூ கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு 1,29,278 கார்களாக உயர்ந்துள்ளது. இது 7 சதவீத வளர்ச்சி ஆகும்.
இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx), 5வது மற்றும் கடைசி இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு மாருதி சுஸுகி நிறுவனம் 94,393 ஃப்ரான்க்ஸ் கார்களை விற்ப செய்துள்ளது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாத கடைசியில்தான் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பிட முடியாது.