இந்த மாணவர்களுக்கு நடப்பாண்டு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு..!
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் 26-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த பொதுத்தேர்வை 7 லட்சத்துக்கும் அதிகமான மாணவ – மாணவிகள் எழுதவுள்ளனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையில் தமிழ்மொழி கட்டாயம் என்ற நடைமுறை இருக்கிறது. இதனால் அனைத்து பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி தேர்வு எழுதுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது மொழி சிறுபான்மையின மாணவர்களுக்கும் பொருந்தும்.
அதாவது, தமிழ் அல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளை தாய்மொழியாக கொண்டுள்ள மாணவர்களும் தமிழ் தேர்வை எழுத வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு எழுதும் மாணவர்கள், அதில் குறைவான மதிப்பெண்களை வாங்குகின்றனர். இதனால் அவர்களின் மொத்த மதிப்பெண் குறைகிறது.
இதனிடையே, தமிழை தாய்மொழியாக கொண்டிராத பள்ளி மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழை கட்டாய மொழி பாடமாக்குவதில் இருந்து ஒரு வருடம் விலக்கு அளித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழை தாய் மொழியாக கொண்டிராத 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிப்பதாக தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்நிலையில், இதேபோன்ற அறிவிப்பை இந்த ஆண்டும் தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. எனவே, பிற மொழிகளை தாய்மொழியாக கொண்ட 10-ம் வகுப்பு மாணவர்கள், தமிழ் தேர்வை எழுத வேண்டியதில்லை. மாறாக, அவரவர் மொழிகளில் தேர்வு எழுத வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.